ஒரே வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டில் 12 பேர் வசித்ததைக் கண்டறிந்த சொத்து முகவர், அண்மையில் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்.
டிக்டாக்கில் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்றில், அந்த வீட்டிற்குள் சொத்து முகவர் நுழைவது தெரிந்தது.
வீட்டில் இருந்தவர்களிடம், “எத்தனைப் பேர் இங்கு வசிக்கிறீர்கள்?” என அவர் கேட்டார்.
வீட்டு அறைகளைச் சோதித்த அவர், வீட்டில் இருந்தவர்களை எண்ணத் தொடங்கினார். அந்த வீட்டின் இடத்தை அவர் காணொளியில் வெளியிடவில்லை.
அலமாரிகளில் ஒன்று உடைந்ததற்கான காரணத்தை வாடகைதாரர்களில் ஒருவரிடம் கேட்ட அந்த முகவர், படுக்கை பிரித்தெடுக்கப்பட்டு நகர்த்தி வைக்கப்பட்டதற்கான காரணத்தையும் கேட்டார்.
காணொளியில் வாடகைதாரர்களிடம் பேசிய அவர், “நீங்கள் எல்லாரும் வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் நான் காவல்துறையை அழைப்பேன். உங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு இங்கிருந்து வெளியேற உங்களுக்கு ஒரு மணி நேரம் தருகிறேன்,” என்றார்.
கடைசியாக அவர் காவல்துறையை அழைத்தார். அக்காணொளி 1.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
வாடகைதாரர்கள் வீட்டைவிட்டு வெளியேற ஒரு மணி நேரம் மட்டுமே கொடுத்ததற்காக அந்த முகவர் கடுமையாக நடந்துகொண்டதாக இணையவாசிகள் சிலர் கருதினர். வேறு சிலரோ, அந்த வாடகைதாரர்கள் வீட்டில் சட்டவிரோதமாக தங்கியதால் அந்த முகவரின் செயல் சரியானதே எனக் குறிப்பிட்டனர்.