சிங்கப்பூரில் சொத்து முகவர்களிடையே கடுமையான போட்டி நிலவுவதால் அவர்களின் சந்தைப்படுத்துதல் செலவினங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, முன்பைவிட குறைவான வீடுகள் விற்கப்படும் நிலையில் சொத்து முகவர்களின் எண்ணிக்கை ஏற்றம் கண்டுள்ளது.
2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் சொத்து முகவர்களின் எண்ணிக்கை 35,251.
இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 34,427ஆகவும் 2022ஆம் ஆண்டில் 32,144ஆகவும் இருந்ததாக சொத்து முகவைகளுக்கான மன்றம் தெரிவித்தது.
2023ஆம் ஆண்டில் எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைச் சேர்க்காமல் மொத்தம் 19,044 தனியார் வீடுகள் விற்கப்பட்டன.
இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 21,890ஆகவும் 2021ஆம் ஆண்டில் 33,557ஆகவும் இருந்தது.
2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் தனியார் வீடுகளுக்கான விற்பனை சரிந்தது.
2023ஆம் ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடுகையில், அது 3.8 விழுக்காடு குறைந்தது 9,145ஆகப் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
2021ஆம் ஆண்டிலிருந்து வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளுக்கான விற்பனையும் ஆண்டு அடிப்படையில் குறைந்துள்ளது.
இருப்பினும், 2024ஆம் ஆண்டின் முற்பாதியில் மொத்தம் 14,420 வீவக மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன.
2023ஆம் ஆண்டின் முற்பாதியில் இந்த எண்ணிக்கை 13,493ஆக இருந்தது.
இந்நிலையில், விளம்பரச் செலவினங்கள் அதிகரித்துள்ளதாக சொத்து முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

