சொத்து முகவர்கள், நிறுவனங்கள் ஆகிய தரப்புகளின் நடத்தை எப்படி இருந்திருக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் எளிதில் தெரிந்துகொள்ள வகைசெய்வதற்கான நடவடிக்கைகளை சொத்து முகவர் மன்றம் (சிஇஏ) எடுத்துவருகிறது.
அந்த வகையில், வீடு வாங்குவோர், விற்போர் அல்லது வாடகைக்கு எடுப்போர், கடந்த மூவாண்டுகளில் சொத்து முகவர்கள்மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம். தவறாக நடந்துகொள்ளும் சொத்து முகவர்களும் சொத்து முகவர் நிறுவனங்களும் மேலும் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்கக்கூடும்.
கூடுதல் வெளிப்படைத் தன்மை
நடவடிக்கை எடுக்கப்பட்ட சொத்து முகவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களின் முழுப் பட்டியலையும் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளலாம். கூடுதல் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்க எடுக்கப்படும் இந்நடவடிக்கை சொத்து முகவர்கள், சொத்து முகவர் நிறுவனங்கள் ஆகிய தரப்புகளின்மீது கூடுதல் நெருக்குதலை ஏற்படுத்துகிறது. தங்களுக்கு இருக்கும் நற்பெயரைக் காப்பாற்ற அவை சரியான நடத்தையைப் பின்பற்றவேண்டியது காரணமாகும்.
சொத்து முகவர் துறை நிபுணத்துவமிக்கத் துறையாக செயல்படுவதை உறுதிப்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இம்மாதம் 10ஆம் தேதி அமலாக்க நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்குப் பிறகு சொத்துச் சந்தை வளர்ச்சிகண்டது. அதனையடுத்து தவறாக நடந்துகொண்ட சொத்து முகவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை இடம்பெறுகிறது.
புகார்கள் அதிகரிப்பு
கடந்த 2024ஆம் ஆண்டு தவறாக நடந்துகொண்ட சொத்து முகவர்கள், நிறுவனங்கள்மீது சொத்து முகவர் மன்றத்திடம் 1,271 புகார்கள் அளிக்கப்பட்டன. இது, 2023ல் பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் 13 விழுக்காடு அதிகமாகும்.
சேவை சரியாக வழங்கப்படாததாக ஆக அதிகப் புகார்கள் எழுந்தன. முகவர்கள் நேரத்துக்கு வராதது, சம்பந்தப்பட்ட விவகாரங்களை அவர்கள் சரியாகக் கையாளாதது போன்றவை அதில் அடங்கும்.
அதேவேளை, தவறான கண்ணோட்டத்தைத் தரும் விளம்பரங்கள், சொத்துப் பரிவர்த்தனைகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க நடந்துகொள்ளாதது போன்ற நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட முகவர்கள் அதிகரிப்பு
தவறு இழைத்ததற்காக சொத்து முகவர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
சென்ற ஆண்டு ஒன்பது நிறுவனங்களைச் சேர்ந்த சொத்து முகவர்கள்மீது 82 அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 2024ல் 10 நிறுவனங்களைச் சேர்ந்த முகவர்கள்மீது 61 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

