பொது, தனியார் சொத்துச் சந்தைகள் நிலையாகியிருப்பதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (ஏப்ரல் 15) தெரிவித்துள்ளார்.
விற்பனைக்கு வரும் வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்போது சொத்துச் சந்தை தணியத் தொடங்கும் என்றார் அவர்.
கூடுதலான கழக வீடுகளும் தனியார் வீடுகளும் விற்பனைக்கு வருவதாலும் ஐந்தாண்டு கால வரையறை முடிந்து மறுவிற்பனைக்குத் தகுதிபெறும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் எண்ணிக்கை கூடியுள்ளதாலும் அது சாத்தியமானது என்றார் திரு லீ.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் கழக வீடுகளின் விலைகள் கிட்டத்தட்ட 1.5 விழுக்காடு கூடியதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தனியார் வீட்டு விலைகள் 0.6 விழுக்காடு கூடின.
வெஸ்ட் கோஸ்ட் - ஜூரொங் குழுத்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சியின் அணியை அறிவித்த திரு லீ, வீடுகள், வாழ்க்கைச் செலவினம், வேலை வாய்ப்புகள், பொருளாதாரம் ஆகிய விவகாரங்கள் குறித்து பொதுத் தேர்தலில் மக்கள் அக்கறை கொண்டிருப்பர் என்றார்.
இவை அனைத்தும் புதிய விவகாரங்கள் அல்ல என்ற அவர், “பெரும்பாலும் அனைத்து பொதுத் தேர்தல்களிலும் இத்தகைய விவகாரங்கள் மக்கள் பலரை அதிகம் பாதிப்பதால் அதிகம் பேசப்படுகின்றன,” என்றார்.
கொவிட்-19 நோய்ப்பரவலால் பாதிக்கப்பட்ட சொத்துச் சந்தையைச் சரிப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக திரு லீ குறிப்பிட்டார்.
திரு லீ இதற்குமுன் 50,000 தேவைகேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள் இவ்வாண்டிலிருந்து 2027ஆம் ஆண்டு வரை விற்பனைக்கு வரும் என்று அறிவித்திருந்தார். அவற்றுள் சுமார் 12,000 வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் மூவாண்டுக்கும் குறைவு.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கிட்டத்தட்ட 19,600 வீடுகளை விற்பனைக்கு விடவிருக்கிறது.
கொவிட்-19 நோய்ப்பரவலால் 92 வீடமைப்புத் திட்டங்களில் 75,800 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தாமதமடைந்தன. அவை அனைத்தையும் கட்டி முடித்து விற்பனைக்கு விட வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கடுமையாக உழைத்ததாகவும் திரு லீ குறிப்பிட்டார்.
தாமதமான தொகுப்பின் இறுதித் திட்டம் இவ்வாண்டு ஜனவரியில் நிறைவடைந்தது.

