உரிமையாளர் வசிக்கும் வீடுகளுக்கு 2027ல் சொத்து வரித் தள்ளுபடி

உரிமையாளர் வசிக்கும் வீடுகளுக்கு 2027ல் சொத்து வரித் தள்ளுபடி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Nov 2026 - 12:16 pm

2 mins read

சிங்கப்பூரில் உரிமையாளர்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு 2027ஆம் ஆண்டில் சொத்து வரித் தள்ளுபடி ஒருமுறை வழங்கப்படவுள்ளது. வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு 15 விழுக்காடும் தனியார் குடியிருப்புகளுக்கு 10 விழுக்காடும் தள்ளுபடி கிடைக்கும். தள்ளுபடி செய்யப்படும் அதிகபட்சத் தொகை 100 வெள்ளியாக இருக்கும்.

வாழ்க்கைச் செலவினக் கவலையைத் தணிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் திங்கட்கிழமை (நவம்பர் 23) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

தள்ளுபடிக்குப் பிறகு, மூவறை அல்லது அதற்கும் பெரிய கழக வீடுகளில் வசிப்போருக்கு மாதச் சொத்து வரி சராசரியாக 2 வெள்ளி முதல் 4 வெள்ளி வரை உயர்ந்திருக்கும். தனியார் குடியிருப்புகளில் வசிக்கும் பெரும்பாலானோருக்கு மாதச் சொத்து வரி சராசரியாக 6 வெள்ளி உயர்ந்திருக்கும்.

ஓரறை, ஈரறை கழக வீட்டு உரிமையாளர்கள் தொடர்ந்து சொத்து வரி செலுத்தத் தேவையில்லை.

அரசாங்கத்தின் வருடாந்தர மறுஆய்வின்படி, வீடமைப்புப் பேட்டைகளில் நிலவும் சந்தை வாடகைக்கு ஏற்ப கழக வீடுகளின் ஆண்டு-மதிப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சமூக ஆதரவுத் திட்டங்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும் ஆண்டு-மதிப்பு வரம்பு 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து உயர்த்தப்படும் என நிதி அமைச்சு இன்னோர் அறிக்கையில் அறிவித்தது.

ஆண்டு-மதிப்பு புதுப்பிக்கப்பட்டாலும் கழக வீடுகளிலும் குறைந்த மதிப்புடைய தனியார் வீடுகளிலும் வசிக்கும் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து உதவி பெறுவதை இது உறுதிசெய்யும்.

வருமானத்துடன் வீட்டின் ஆண்டு மதிப்பும் பலன் அளவுகோலாகப் பயன்படுத்தப்படக்கூடும்.

தற்போது, அதிகத் தேவை உள்ள சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்வதற்காகப் பல்வேறு அரசாங்க சமூக ஆதரவுத் திட்டங்கள் அடுக்குமுறைச் சலுகைகளை வழங்குவதாக நிதி அமைச்சு தெரிவித்தது. நிரந்தரப் பொருள்-சேவை வரிப் பற்றுச்சீட்டு, மெடிஷீல்ட் லைஃப் சந்தா மானியம், வேலைநலன் துணை வருமானத் திட்டம் ஆகியவை இவற்றில் அடங்கும்.

இதன்படி, முதலாவது ஆண்டு-மதிப்பு வரம்பு 21,000 வெள்ளி வரையிலிருந்து 24,000 வெள்ளி வரையாக உயர்த்தப்படும்.

இரண்டாவது வரம்பு 21,000 வெள்ளிக்கும் மேல் 31,000 வெள்ளி எனும் நிலையிலிருந்து 24,000 வெள்ளிக்கும் மேல் 32,000 வெள்ளி வரையாக அதிகரிக்கப்படும்.

2027ஆம் ஆண்டுச் சலுகைகளுக்கான தகுதியை நிர்ணயிக்க, 2026 ஆண்டு-மதிப்பு கணக்கில் கொள்ளப்படும்.

கூடுதல் விவரங்களுக்குத் தொடர்புடைய அரசாங்க அமைப்புகளை அணுகலாம்.

அதிகத் தேவை உள்ள சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்யச் சமூக ஆதரவுத் திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து மறுஆய்வு செய்யும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்