சிங்கப்பூரின் ஆகப் பெரிய சொத்து முகவையான புரோப்நெக்ஸ், சமூக உண்டியலுக்கு $6 மில்லியன் நன்கொடை வழங்க இருக்கிறது. எஸ்ஜி 60 கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த நன்கொடை வழங்கப்படுகிறது.
அத்துடன், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைக்காசு நிதி போன்ற திட்டங்களுக்கும் புரோப்நெக்ஸ் நன்கொடை வழங்குகிறது.
செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 15) புரோப்நெக்ஸ் நிறுவனத்தின் 25வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது நன்கொடை குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் இஸ்மாயில் கஃபூர் அறிவித்தார்.
புரோப்நெக்ஸ் நிறுவனத்தின் 25வது ஆண்டு விழா மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. அதில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலந்துகொண்டார்.
$6 மில்லியன் நன்கொடை 12 மாதங்களில் பகுதி பகுதியாக வழங்கப்படும். இதுவே புரோப்நெக்ஸ் நிறுவனம் வழங்கும் ஆகப் பெரிய நன்கொடையாகும். அதுமட்டுமல்லாது, 2025லிருந்து 2027ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் $1.5 மில்லியன் நன்கொடை வழங்கப்படும் என்று புரோப்நெக்ஸ் உறுதி பூண்டது.
சிங்கப்பூர் தேசிய சமூக சேவையின் ஒரு பிரிவான சமூக உண்டியலுக்கு புரோப்நெக்ஸ் நிறுவனம் முதன்முதலாக 2013ஆம் ஆண்டில் நன்கொடை வழங்கியது.
கடந்த 12 ஆண்டுகளில் சமூக உண்டியலுக்கு அந்நிறுவனம் $10 மில்லியனுக்கும் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளது.
சிறப்புத் தேவைகள் உள்ள சிறுவர்கள், எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய சிறுவர்கள், குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்கள் போன்றவர்களுக்கு சமூக உண்டியல் ஆதரவு வழங்குகிறது.