பொங்கோலில் ஓட்டுநரில்லா வாகனச் சேவைக்குப் பரிந்துரை

1 mins read
fd4f0262-f92c-4364-b2f8-8b553af4de60
பரிந்துரைக்கப்பட்ட அந்த வாகனச் சேவையின்கீழ், முதல் 12 மாதங்களுக்குப் பாதுகாப்பு அதிகாரிகள் அந்தத் தானியக்க வாகனத்தில் பயணம் செய்வர். - படம்: RYDE GROUP LTD

உள்ளூர் நிறுவனங்களான ‘ரைடு’, ‘மூவிட்டா’ இரண்டும் இணைந்து பொங்கோலில் தானியக்க வாகனச் சேவைக்குப் பரிந்துரை செய்துள்ளன.

இச்சேவை பொங்கோல் குடியிருப்பாளர்களை ரயில் நிலையங்களுக்கும் போக்குவரத்து நடுவங்களுக்கும் இட்டுச்செல்லும்.

வாடகை கார் பகிர்வுச் சேவை வழங்கும் ‘ரைடு’ நிறுவனம், தானியக்க வாகனத் தொழில்நுட்ப நிறுவனமான ‘மூவிட்டா’வுடன் இணைந்து இந்த ஆண்டின் (2025) நான்காம் காலாண்டில் இச்சேவையைத் தொடங்கப் பரிந்துரைத்துள்ளது.

இதன் தொடர்பில் விரிவான பரிந்துரை அறிக்கையை நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் சமர்ப்பித்திருப்பதாகப் புதன்கிழமை (செப்டம்பர் 10) வெளியிட்ட அறிக்கையில் ‘ரைடு’ நிறுவனம் தெரிவித்தது.

செப்டம்பர் 6ஆம் தேதி அந்தப் பரிந்துரை வந்துசேர்ந்ததாகக் கூறிய ஆணையம், இன்னும் அதனை மறுஆய்வு செய்யவோ நிறுவனத்துடன் கலந்துபேசவோ இல்லை என்று குறிப்பிட்டது.

பொங்கோலில் தானியக்க முறையிலான வாகனச் சேவைகளை வழங்குவது குறித்த விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று அது கூறியது.

பயனாளர்கள் இச்சேவைக்கு ‘ரைடு’ செயலி மூலம் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் என்று ‘ரைடு’ நிறுவனம் கூறியது. மேலும், இச்சேவை கட்டங்கட்டமாக அறிமுகம் காணும் என்றும் அது தெரிவித்தது.

சேவை அறிமுகமான பிறகு, முதல் 12 மாதங்களுக்குப் பாதுகாப்பு அதிகாரிகள் அந்தத் தானியக்க வாகனத்தில் பயணம் செய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆணையத்தின் ஒப்புதலுடன் சிறிது காலம் தொலைவிலிருந்து கண்காணிக்கவும் அதையடுத்து முழுமையான தானியக்கச் சேவையாக அது செயல்படும் என்றும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்