2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் மின்னிலக்கப் பொருளியல் 144.1 பில்லியன் வெள்ளியாக வளர்ச்சி கண்டுள்ளது.
இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19.3 விழுக்காடாக உள்ளது.
மின்னிலக்கச் சேவை தரவு நிலையங்கள், ‘கிளவுட்’ சேவை வழங்குநர்களை அதிக அளவில் சார்ந்திருப்பதால் அவற்றில் ஏற்படும் தடங்கல்கள் பொருளியலிலும் சமூகத்திலும் கட்டமைப்பு ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தகவல் மின்னிலக்க மேம்பாட்டுக்கான மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தரவு நிலையச் செயல்பாடுகளின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்தும் அதேவேளையில், முக்கிய கிளவுட் சேவைகள், தரவு நிலையங்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் மீள்திறனை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மசோதாவின்கீழ் இரண்டு புதிய உரிம முறைகள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் உரிம முறையானது, முக்கிய ‘கோ-லொக்கேஷன்’ தரவு நிலையங்கள், அதாவது வணிகங்கள் தங்களது தரவு நிலையங்களை அமைக்க ஒரே இடத்தைப் பகிர்ந்துகொள்ளும் முறையையும் குறைந்தது 10 மெகாவாட் முக்கியத் தகவல் தொழில்நுட்ப மின்பளுவைக் கொண்ட கிளவுட் தரவு நிலையங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது.
இந்த மசோதாவின்படி இந்தத் தரவு நிலையங்கள், கிளவுட் சேவை வழங்குநர்களிடம் இணையப் பாதுகாப்புத் தேவைகளை நிறைவு செய்துகொள்வது எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், அடுத்தடுத்த இடர் மேலாண்மை நடவடிக்கைகள், வர்த்தகத் தொடர்ச்சி, பேரிடர் மீட்புத் திட்டங்கள், அத்துடன் ஏற்படக்கூடிய எந்தவொரு தடங்கல்கள் குறித்தும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்திடம் தெரிவிக்கப்பட வேண்டும்.
அடுத்து, குறைந்தது 3 மெகாவாட் மின்பளுவைக் கொண்ட தரவு நிலையங்களுக்கு உரிமம் வழங்கப்படும்.
ஏற்கெனவே உள்ள தரவு நிலையங்களும் புதிய தரவு நிலையங்களும் இந்தத் தேவைகளைப் பின்பற்ற வேண்டும்.
மேலும், தொழில்துறையினருடன் தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு நடத்தும் ஆலோசனையின் அடிப்படையில், அவை தங்களது தகவல் தொழில்நுட்பக் கருவிகள் அல்லது நீர்ப் பயன்பாட்டுச் செயல்திறனை மேம்படுத்த வேண்டியிருக்கலாம்.
“தடங்கல் ஏற்படும்போது, அதனுடைய தாக்கம் ஒரு மின்னிலக்கச் சேவையோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. பல சேவைகள் ஒரே நேரத்தில் பாதிக்கப்படலாம், மேலும் அந்தத் தாக்கம் நமது பொருளியலிலும் சமூகம் முழுவதிலும் விரைவாகப் பரவக்கூடும்,” என்று நாடாளுமன்றத்தில் மின்னிலக்க உள்கட்டமைப்பு மசோதாவின் இரண்டாவது வாசிப்பின் போது மூத்த துணை அமைச்சர் கூறினார்.
