தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பணியிடப் பாதுகாப்பை அதிகரிக்கும் வேலையிட நியாயத்தன்மை சட்டத்திற்கு ஒப்புதல்

2 mins read
5fd7af0c-28fd-4802-8545-cbb5bafec3b3
சிங்கப்பூரின் முதலாவது வேலையிட நியாயத்தன்மை சட்டத்திற்கு இணங்க மறுக்கும் முதலாளிகள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வருங்காலத்தில் கருத்தரிக்கத் திட்டமிடும் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் வேலை செய்யும் தாய்மார்கள், உடற்குறைபாடு உள்ளவர்கள் புதிய வேலையிட நியாயத்தன்மைச் சட்டத்தின்கீழ் வலுவான பாதுகாப்பைப் பெறுவார்கள்.

சிங்கப்பூரின் முதலாவது வேலையிட நியாயத்தன்மைச் சட்டத்திற்கு இணங்க மறுக்கும் முதலாளிகள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள். இந்தச் சட்டம் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நடைமுறைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலையிடப் பாகுபாட்டிற்குத் தீர்வுகாண அமைக்கப்பட்ட முத்தரப்புக் குழு 22 பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன் அடிப்படையில் இந்த சட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு ஜூலையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் மனிதவள அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

நல்லுறவுகளைப் பேணும் வேலையிடங்களை உருவாக்குதல், ஊழியர்களைப் பாதுகாத்தல், தொழில் வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் ஆகிய அம்சங்களின்மீது சிங்கப்பூர் கொண்டுள்ள முத்தரப்பு முக்கியத்துவத்துக்கு இந்த முன்மொழியப்பட்ட சட்டம் ஒரு முக்கியமான படி என்று செய்தியாளர் கூட்டத்தில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் குறிப்பிட்டார்.

முன்மொழியப்பட்ட புதிய சட்டத்தின்படி, முதலாளிகள் குறைகளைக் கையாளும் செயல்முறைகளை அமைத்து, அதன் நடைமுறைகளைப் பற்றி ஊழியர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

முதலாளிகள் புகாரைப் பெற்றவுடன் அது குறித்து விசாரணை மேற்கொண்டு, அதன் செயல்முறையை ஆவணப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட ஊழியருக்கு விசாரணையின் முடிவைத் தெரிவிக்க வேண்டும். மேலும், அவர் குறித்த விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்.

வேலையிடத்தில் உள்ள பாகுபாடு குறித்துப் புகாரளிக்கும் ஊழியர்களுக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கை, பணிநீக்கம் செய்தல், சம்பளப் பிடித்தம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இந்தச் சட்டம் தடுக்கும்.

பணியமர்த்தல் முதல் பணிநீக்கம் வரை அனைத்து வகை வேலை நிலைகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.

குறிப்புச் சொற்கள்