வேலையிடப் பாகுபாட்டிலிருந்து ஊழியர்களைப் பாதுகாக்கும் உத்தேசச் சட்டம் தாக்கல்

2 mins read
f41178d0-06c1-4cca-abf5-3fc362c67846
தாங்கள் பாகுபாட்டோடு நடத்தப்பட்ட நிலையில் ஊழியர்கள் உதவி நாடுவதற்குப் புதிய சட்டம் கூடுதல் வழிகளை அமைத்துக்கொடுக்கும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேலையிட நியாயத்தன்மை குறித்த புதிய மசோதாவை மனிதவள அமைச்சு நவம்பர் 12ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

தாங்கள் பாகுபாட்டோடு நடத்தப்பட்ட நிலையில் ஊழியர்கள் உதவி நாட, இச்சட்டம் கூடுதல் வழிகளை அமைத்துக்கொடுக்கும்.

தற்போதைய வேலையிட வழக்கங்களை வலுவாக நிறுவுவதையும் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் இச்சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

நியாயமான வேலை நியமன நடைமுறைக்கான முத்தரப்பு வழிகாட்டிகள், 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இப்புதிய சட்டம் மேலும் சீராக்கும்.

இரண்டு மசோதாக்களின் மூலம் இச்சட்டம் அறிமுகமாகும். இந்நிலையில், இரண்டாவது மசோதா அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும்.

முதலாவது மசோதாவை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நவம்பர் 12ஆம் தேதி தாக்கல் செய்தார். வேலையிட நியாயத்தன்மை தொடர்பான சட்டத்தின் கூறுகள் யாவை, முதலாளிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் யாவை போன்றவற்றை மசோதா வரையறுக்கும்.

நபர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளுக்கான செயல்முறைகளை இரண்டாவது மசோதா அறிமுகப்படுத்தும். அத்துடன், தற்போதைய வேலை கோரிக்கை நடுவர் மன்றத்தின் விரிவாக்கமாகவும் இது அமையும். இது தொடர்பான சில விவரங்களை உறுதிப்படுத்த சிலகாலம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது.

“அனைத்தையும் உறுதிப்படுத்த முதலாவது மசோதாவை நாங்கள் தாமதமாக்க விரும்பவில்லை. முதலாவது மசோதாவை முதலில் தாக்கம் செய்ய நினைத்தோம். அப்போதுதான் இதற்காகத் தயாராகும் பணியில் நிறுவனங்கள் ஈடுபடத் தொடங்கும்,” என்று மனிதவள அமைச்சின் பேச்சாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இரு மசோதாக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சட்டம் 2026 அல்லது 2027ல் நடப்புக்கு வரலாம் என்றது மனிதவள அமைச்சு.

வயது, நாட்டுரிமை, பாலினம், திருமணத் தகுதி, கருவுற்ற தகுதி, பராமரிப்புப் பொறுப்புகள், இனம், மொழி, சமயம், உடற்குறை மற்றும் மனநலப் பிரச்சினைகள் போன்ற அம்சங்களின் தொடர்பில் ஒருவருக்கு முதலாவது மசோதா பாதுகாப்பு அளிக்கும்.

நியாயமான, படிப்படியாக முன்னேறத்தக்க வேலைநியமன நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணி, மனிதவள அமைச்சு ஆகிய இரண்டுக்கும் பாகுபாடு தொடர்பாகக் கிடைக்கும் புகார்களில் இக்குறிப்பிட்ட அம்சங்கள் தொடர்பானவை 95 விழுக்காட்டுக்கும் அதிகமானவை.

அவ்வகையில் 2018ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பாகுபாடு தொடர்பாகச் சராசரியாக 315 புகார்கள் இருதரப்புகளுக்கும் அளிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்