சட்டவிரோதமாக விளையாட்டுத் துப்பாக்கிகளை இறக்குமதி செய்தவர்: 4 வார சிறை கோரும் அரசு தரப்பு

சட்டவிரோதமாக விளையாட்டுத் துப்பாக்கிகளை இறக்குமதி செய்தவர்: 4 வார சிறை கோரும் அரசு தரப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Aug 2024 - 7:17 pm

1 mins read

பார்ப்பதற்கு உண்மையான துப்பாக்கிகளைப் போல இருக்கும் விளையாட்டுத் துப்பாக்கிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த ஆடவருக்கு அதிகபட்சம் 4 வாரச் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த விளையாட்டுத் துப்பாக்கிகளில் சிலவற்றை விநியோகம் செய்த கிராப் ஓட்டுநர் ஒருவருக்குச் சந்தேகம் எழுந்து அதுகுறித்து தமது நிறுவனத்திடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, சிங்கப்பூரரான லியூ ஹுவிஜியேன் 2018ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

அவரது வீட்டில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தியபோது பார்ப்பதற்கு உண்மையான துப்பாக்கிகளைப் போல இருக்கும் 150க்கும் அதிகமான விளையாட்டுத் துப்பாக்கிகளும் அவற்றின் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன.

இதுதொடர்பான வழக்கு விசாரணை 2021ஆம் ஆண்டில் தொடங்கியது.

43 நாள் வழக்கு விசாரணையை அடுத்து, லியூ குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், 44 வயது லியூவிற்கு இரண்டு வாரங்கள் முதல் நான்கு வாரங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கும்படி மாவட்ட நீதிபதி ஹர்மிளா ஸ்ரீபதி ஷனாசிடம் துணை அரசாங்க வழக்கறிஞர் சியா வென்ஜியே 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியன்று கேட்டுக்கொண்டார்.

லியூ இறக்குமதி செய்த விளையாட்டுத் துப்பாக்கிகள் பார்ப்பதற்கு உண்மையான துப்பாக்கிகளைப் போல இருந்ததை அவர் சுட்டினார்.

லியூ இறக்குமதி செய்த துப்பாக்கிகளில் குறைந்தது ஒரு துப்பாக்கி நெகிழித் தோட்டாக்களைச் சுடக்கூடியவை என்றும் கண்களைக் காயப்படுத்தக்கூடியவை என்றும் துணை அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 25ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்