தப்பியோடிய இந்தோனீசியரின் பிணை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண வாக்குமூலத்தில் சிங்கப்பூரின் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐபி) மீது சில புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அது குறித்த குறிப்பிட்ட பகுதியை அகற்ற அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் முயற்சிகளை எடுத்துள்ளனர்.
இந்தோனீசியாவில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பாலஸ் டன்னோஸ் கடந்த ஜனவரி 17ஆம் தேதி சிங்கப்பூரில் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்பு 2021 அக்டோபர் 19ஆம் தேதியிலிருந்து அவர் இந்தோனீசியாவின் தப்பியோடியவர் பட்டிலில் இடம்பெற்று இருந்தார்.
மே 27ஆம் தேதி நீதிமன்றத்தில் பேசிய மூத்த துணை அரசு வழக்கறிஞர் சிவகுமார் ராமசாமி, சாங்கி பொது மருத்துவமனையில் மே 2 முதல் 9 வரை டன்னோஸ் சேர்க்கப்பட்டது தொடர்பான உண்மைகளை தெரிவிக்க மே 15ஆம் தேதியன்று டன்னோஸைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அனுமதி கோரியதாக தெரிவித்தார். இவற்றுக்கு நீதிமன்றம் அனுமதித்த பிறகு, இரண்டு பிரமாணப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஒன்று டன்னோஸிடமிருந்தும் மற்றொன்று பாலஸ் சினாட்ரா விஜயா என்ற வழக்கறிஞரிடமிருந்து தாக்கல் செய்யப்பட்டன. இவை, நீதிமன்ற அனுமதிக்கு அப்பாற்பட்டவை என்றார் திரு சிவகுமார்.
டன்னோஸின் சொந்த பிரமாணப் பத்திரத்தின் சில பகுதிகள் இந்தோனீசிய அதிகாரிகள் மற்றும் சிபிஐபி உடனான அவரது கடந்தகால கலந்துரையாடல்களை உள்ளடக்கியது என்றும் அவர் விமானத்தில் தப்பிச் செல்வதற்கான ஆபத்து குறித்து சிபிஐபி விசாரணை அதிகாரி கூறிய கருத்துகளுக்கு பதிலளித்தும் கருத்துகள் இடம்பெற்று இருந்ததாகவும் அவர் கூறினார். இவை, முந்தைய பிணை விசாரணையில் உள்ளடங்கியிருந்தன. இந்தப் பிரச்சினைகள் குறித்து சட்ட வாதங்கள் நடந்தது என்று திரு. சிவகுமார் மேலும் தெரிவித்தார். இரண்டாவது பிரமாணப் பத்திரத்திற்கு அனுமதியில்லை என்று கூறிய அவர், அந்தப் பிரமாணப் பத்திரத்திலும் இந்தோனீசிய அதிகாரிகள், சிபிஐபி-உடனான டன்னோஸின் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன என்றார் அவர்.
இந்தப் பிரமாணப் பத்திரத்தையும் மற்றொன்றின் சில பகுதிகளையும் ரத்து செய்யவும் புறக்கணிக்கவும் அரசுத் தரப்பு விண்ணப்பிப்பதாக திரு. சிவகுமார் தெரிவித்தார்.