செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அதன் நன்மைகள் அனைவருக்கும் பரவலாகக் கிடைப்பதை உறுதிசெய்வதும் ஒவ்வொரு வேலையையும்விட ஒவ்வோர் ஊழியரையும் பாதுகாப்பதுமே சிங்கப்பூரின் முதன்மை அணுகுமுறையாகும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
ஷங்ரி-லா சிங்கப்பூர் ஹோட்டலில் வியாழக்கிழமை (அக்டோபர் 8) நடைபெற்ற ஃபோர்ப்ஸ் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகள் மாநாட்டில் ஃபோர்ப்ஸ் மீடியா தலைவர் ஸ்டீவ் ஃபோர்ப்சுடன் உரையாடியபோது திரு வோங் இதனைப் பகிர்ந்துகொண்டார். அரசாங்கம், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் இடையே பல்லாண்டுகளாகக் கட்டியெழுப்பப்பட்ட வலுவான கூட்டுறவே இதற்கு முக்கியக் காரணம் என்றார் பிரதமர்.
செயற்கை நுண்ணறிவுக்கு மாறும்போது வேலைகளில் ஏற்படும் மாற்றத்தைச் சிங்கப்பூர் எவ்வாறு கையாள்கிறது என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
தொழில்நுட்ப மாற்றத்தால் சில வேலைகள் மாறினாலும் ஆட்குறைப்பை இறுதி முடிவாக மட்டுமே மேற்கொள்ளும்படி நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன என்றார் திரு வோங்.
சிங்கப்பூர் இந்த மாற்றத்தில் தொழிற்சங்கங்களை இடையூறுகளாகக் கருதுவதில்லை; எடுத்துக்காட்டாக அரசு மானியங்கள், தொழிற்சங்கங்களின் வாயிலாக நிர்வகிக்கப்பட்டு ஊழியர்களின் தகவல் தொழில்நுட்பத் திறன்களை உயர்த்தப் பயன்படுகின்றன என்றார் அவர்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நியாயமான முறையில் ஆட்குறைப்புச் சலுகைகளும் முன்னறிவிப்பும் வழங்கி, தொழிற்சங்கங்களுடன் இணைந்து அவர்களுக்கு மறுபயிற்சி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுவதாகத் திரு வோங் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மைக்ரான், குளோபல்ஃபவுண்டரீஸ் போன்ற சிறப்புச் சில்லுத் தயாரிப்பு நிறுவனங்களும் பகுதி மின்கடத்தித் துறையும் பயன்பெற்றுள்ளன. இதனால் சிங்கப்பூர் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு ஐந்து விழுக்காட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பதிவு செய்ய முடிந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அத்துடன், தளவாடங்கள், நிபுணத்துவச் சேவைகள் போன்ற பிற துறைகளுக்கும் ஆக்ககரமான நன்மைகள் கிடைத்துள்ளன. இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திப் புதிய திறன்களைக் கட்டமைக்கவும் சிங்கப்பூரர்களுக்குச் சிறந்த வேலைகளை உருவாக்கவும் சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது என்றார் அவர்.
செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த திரு வோங், அதன் கட்டுப்பாட்டை இழப்பதும் அதைத் தவறான செயல்களுக்குப் பயன்படுத்துவதும் மிகப்பெரிய ஆபத்தாகும் என்பதைச் சுட்டினார்.
இதற்கு அனைத்துலக அளவிலான விதிகள் தேவைப்படுகின்றன. அமெரிக்காவின் சிறப்புப் பணிக்குழுவை வரவேற்ற அவர், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின்கீழ் பொதுவான விதிகள் உருவாக்கப்படலாம் என்றார். துறை சார்ந்த பயன்பாடுகளில் தானியக்க கார்கள் பொறுப்பான முறையிலும் பாதுகாப்பாகவும் சோதிக்கப்பட்டு வருகின்றன.
உலக அளவில் வர்த்தகத் தடைகள் அதிகரித்து வந்தபோதிலும் சிங்கப்பூர் தொடர்ந்து வெளிப்படைத்தன்மையுடன் தடையற்ற வர்த்தகத்தை ஆதரித்துச் செயல்படும்; வெவ்வேறான வட்டாரங்களை இணைக்கும் பாலமாகச் செயல்பட விரும்புவதாகக் கூறிய பிரதமர் வோங், அடுத்த ஆண்டு ஆசியான் அமைப்பிற்குத் தலைமை ஏற்கும்போது, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற புதிய வட்டாரங்களுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்தச் சிங்கப்பூர் இலக்குக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
