ஊழியர்கள் நலன் பாதுகாப்பு; புதிய ஆலோசனைகளை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஊழியர்கள் நலன் பாதுகாப்பு; புதிய ஆலோசனைகளை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

3 mins read
fe17dc64-41b4-4fb7-884d-473a2be8af45
தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாளரும் ஜாலான் காயு தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான இங் சீ மெங், நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதற்கு முன்பே தொழிற்சங்கங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
Google News Preferred Icon

வரவுசெலவுத் திட்ட 2026 விவாதத்தின் இரண்டாம் நாளில், சிங்கப்பூர் ஊழியர்கள் நலனைப் பாதுகாப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர்.

குறிப்பாக, ஆட்குறைப்பு நடவடிக்கைகளிலிருந்து ஊழியர்களைப் பாதுகாத்தல், அனைவரையும் உள்ளடக்கிய பணியிடங்களை உருவாக்குதல் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துதல் போன்ற விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டது.

தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாளரும் ஜாலான் காயு தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான இங் சீ மெங், நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதற்கு முன்பே தொழிற்சங்கங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“ஆட்குறைப்பு செய்த ஐந்து நாள்களுக்குப் பிறகு தகவல் தெரிவிப்பதால் எந்தப் பயனும் இல்லை. அதற்குள் பல ஊழியர்கள் நிறுவனத்தை விட்டுச் சென்றிருப்பார்கள். முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் மட்டுமே, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் மாற்று வேலை வாய்ப்புகளையும் தொழிற்சங்கங்களால் சரியான நேரத்தில் வழங்க முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கை நிறுவனங்களின் நீக்குப்போக்குத் தன்மையைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, மாறாக முத்தரப்பு உறவை வலுப்படுத்தி ஊழியர்களுக்கு முறையான ஆதரவை வழங்குவதற்காகவே என்று அவர் தெளிவுபடுத்தினார்.

தற்போதுள்ள ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை தேடுவோர் ஆதரவுத் திட்டத்தின்கீழ் உதவி பெற, ஒருவரின் கடைசி மாதச் சம்பளம் $5,000க்குக்கீழ் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதை $7,600 ஆக உயர்த்த வேண்டும் என்று திரு இங் சீ மெங் மற்றும் பைனியர் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டே ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், வேலையிழந்தவர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு $6,000 வரை தற்காலிக நிதி உதவியை வழங்குகிறது என்றும் ஆட்குறைப்பை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் இன்னும் கூடுதலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் திரு இங் கூறினார்.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை தேடுவோர் ஆதரவுத் திட்டத்தின்கீழ் உள்ள வருமான வரம்பை உயர்த்த வேண்டும் என்ற திரு இங்கின் ஆலோசனையை என்டியுசி உதவித் தலைமைச் செயலாளருமான திரு டே வழிமொழிந்தார்.

மனிதவள அமைச்சின் தரவுப்படி, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் பெறப்பட்ட 7,200 ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை தேடுவோர் ஆதரவுத் திட்ட விண்ணப்பங்களில் 60 விழுக்காடு நிராகரிக்கப்பட்டதை அவர் சுட்டினார்.

“விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான முக்கிய மூன்று காரணங்களில் ஒன்று, மாத வருமானம் $5,000 வரம்பைத் தாண்டியதாகும்,” என்று கூறிய திரு டே, வேலையிழந்த நடுத்தர வர்க்க ஊழியர்களுக்கு ஆதரவளிக்க இன்னும் நிறைய செய்ய முடியும் என்று வலியுறுத்தினார்.

இதற்கிடையே, நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் குமார் திவாரி பேசுகையில், குறிப்பிட்ட கால ஒப்பந்த முறைகள், குறிப்பாக ஆண்டுதோறும் புதுப்பிக்கும் முறை தொடர்வது ஊழியர்களுக்கு அழுத்தத்தைத் தருகிறது என்று கூறினார்.

2025ஆம் ஆண்டில் குறிப்பிட்ட கால ஒப்பந்தத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பங்கு சற்று குறைந்திருந்தாலும், தற்போது 90 விழுக்காட்டுக்கும் அதிகமான உள்ளூர் ஊழியர்கள் நிரந்தரப் பணிகளில் உள்ளனர் என்றும் இருப்பினும் ஏறத்தாழ ஏழு விழுக்காட்டினர் இன்னும் ஒப்பந்த அடிப்படையிலேயே இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார். மேலும், ஓர் ஆண்டு கால ஒப்பந்தப் பணிகளில் முதியவர்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளதாவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்ஆட்குறைப்புஎன்டியுசி

தொடர்புடைய செய்திகள்