ஆறு பிள்ளைகளுக்குத் தாயாரான திருவாட்டி சுசியாந்தி சுகார்பி, 36, பகுதி நேரமாக மூன்று வேலைகளைச் செய்து குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரேயொருவராக விளங்குகிறார்.
இப்படிப்பட்ட சூழலிலும் தாம் குடியிருக்கும் அங் மோ கியோ சுற்றுவட்டாரத்தில் வசதிகுறைந்த பிள்ளைகளுக்கு வாரத்திற்கு மும்முறை இலவசமாக காலை உணவு வழங்கி வருகிறார்.
பள்ளி சிற்றுண்டியகத்தில் முன்னாள் கடைக்காரரான அவர், பிப்ரவரியில் ‘பிரேக்ஃபஸ்ட் படி’ எனும் முயற்சியைத் தொடங்கினார்.
ஈரறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாடகை வீட்டில் வசிக்கும் திருவாட்டி லிடியா, சராசரியாக மாதம் $3,000 ஈட்டுகிறார். ஒன்றுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட இவருடைய ஆறு பிள்ளைகளைக் கணவர் வீட்டில் இருந்து கவனித்துக்கொள்கிறார்.
தம் சொந்த தேவைகளுக்கே பணம் சரியாக இருந்தாலும், மற்ற பிள்ளைகளுக்கு காலை உணவு வழங்கும் கனவை இவர் கைவிடவில்லை.
இந்த முயற்சியை எவ்வளவு காலத்திற்கு தம்மால் தொடர முடியும் என்ற சந்தேகம் தொடக்கத்தில் இருந்தாலும், எண்ணியபடி இச்செயலில் இறங்கியதாக திருவாட்டி லிடியா பகிர்ந்தார்.
அங் மோ கியோ ஸ்திரீட் 23 புளோக் 228ஏ வெற்றுத்தள்ளத்தில் காலை 6.30 மணிக்கு காலை உணவு பரிமாறப்படுகிறது.
திருவாட்டி லிடியாவும் இந்த முயற்சிக்குக் கைகொடுக்கும் அவருடைய பங்காளி திருவாட்டி ஹலினா யாத்திமும் சீரியல், ரொட்டி, பிஸ்கெட்டுகள், ரொட்டியில் தடவும் கடலை வெண்ணெய், நட்டெல்லா போன்றவற்றைத் தயார்செய்கின்றனர். பானங்களில் சூடான மைலோ, பால், சாறு உள்ளிட்டவை அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு முறையும் ஏறக்குறைய 15 பிள்ளைகள் உணவருந்த வருவதாக திருவாட்டி லிடியா தெரிவித்தார்.
தமக்கு மூட்டு, நரம்பியல் பிரச்சினைகள் இருந்தாலும், இந்தக் காலை உணவு முயற்சிக்கு தம்மால் முடியும்வரை உதவுவதாக திருவாட்டி ஹலினா, 52, சொன்னார்.
“பிள்ளைகள் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குச் செல்வதைக் காணும்போது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார் அவர்.

