சிங்கப்பூருக்குள் ஆடவர் ஒருவர் $200,000 மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தைக் கடத்த முயன்றதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக வந்தபோது இம்மாதம் 23ஆம் தேதி ஆடவர் பிடிபட்டார்.
மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட காரில் அதிகாரிகள் மேற்கொண்ட கூடுதல் சோதனைகள் மூலம் பயணிகளின் இருக்கைக்குக் கீழும் பயணப் பெட்டியிலும் ஆடவர் வெளிநாட்டு பணத்தைப் பதுக்கி வைத்திருந்தது அம்பலமானது.
ஆடவரிடம் கண்டுபிடிக்கப்பட்ட ரொக்கம் புருணை நாட்டைச் சேர்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலேசியாவைச் சேர்ந்த 54 வயது கார் ஓட்டுநர் மற்றொருவரின் சார்பில் சிங்கப்பூருக்குள் அந்தப் பணத்தைக் கொண்டு வர முற்பட்டதாகத் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அது தொடர்பிலான தகவலை அளிக்க ஆடவர் தவறினார்.
ஆடவரின் வழக்கு சிங்கப்பூர்க் காவல்துறையிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்குள் $20,000க்கும் அதிகமான ரொக்கத்துடன் நுழைய முற்படும் பயணிகள் அதிகாரிகளிடம் அதுகுறித்த தெளிவான தகவல்களை அளிக்கவேண்டும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் நினைவூட்டுகிறது.


