சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட 31 லிட்டர் இருமல் மருந்து ஜூ சியாட் வட்டாரத்தில் பிடிபட்டுள்ளது.
அதனுடன், 5,200 போத்தல் மயக்க மருந்தும் வீடு ஒன்றிலிருந்து இம்மாதம் 5ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கைப்பற்றப்பட்டது.
அந்த இரு மருந்துகளின் சந்தை மதிப்பு $21,500 என்றும் சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக விநியோகம் செய்யும் நோக்கத்தில் அவை வைக்கப்பட்டிருந்தன என்றும் சுகாதார அறிவியல் ஆணையம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) கூறியது.
பதிவு செய்யப்படாத சுகாதாரப் பொருள்கள் புழக்கத்தில் விடப்பட்டு இருப்பது பற்றி தகவல் கிடைத்ததும் ஆணைய அதிகாரிகளும் பிடோக் காவல்துறை அதிகாரிகளும் டிசம்பர் 5ஆம் தேதி தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, 55 வயது ஆடவர் சிக்கியதாகவும் சட்டவிரோதமாக இருமல் மருந்தைத் தயாரித்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதாகவும் ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையில் ஆணையம் குறிப்பிட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.
சுகாதாரமற்ற நிலையில், முறையான உரிமம் பெறாமல், தரக்கப்பட்டுப்பாட்டுச் சோதனை செய்யப்படாமல் அந்த மருந்து சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்டது.
அதனை விற்பனை செய்தவர் மீதான விசாரணை நடைபெற்று வருவதாக ஆணையம் தெரிவித்தது.
இதற்கு முன்னர், கடந்த நவம்பர் மாதத்திலும் அதுபோன்ற சம்பவம் நடைபெற்றது. இரு வெவ்வேறு சோதனைகளின்போது $41,000 மதிப்புள்ள இருமல் மருந்துகளையும் மயக்க மருந்துகளையும் ஆணைய அதிகாரிகள் அப்போது கைப்பற்றினர்.
தொடர்புடைய செய்திகள்
சட்டவிரோத சுகாதாரப் பொருள்களை இறக்குமதி செய்வது, தயாரிப்பது, விற்பது போன்ற செயல்கள் குற்றமாகும். அந்தக் குற்றத்திற்கு ஈராண்டு சிறை, $50,000 அபராதம் ஆகியன தனித்தோ சேர்த்தோ விதிக்கப்படலாம்.

