டௌன்டவுன் ரயில் பாதையின் இரண்டாம் கட்ட நீட்டிப்புக்கான $326 மில்லியன் ஏலக்குத்தகையை நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (ஜனவரி 15) வழங்கி உள்ளது.
அதனைத் தொடர்ந்து, அதன் கட்டுமானப் பணிகள் இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின்னர் 2035ஆம் ஆண்டுவாக்கில் அதன் பயணிகள் சேவை தொடங்கும்.
டௌன்டவுன் ரயில் பாதையில் புக்கிட் பாஞ்சாங் நிலையத்தை அடுத்து, வடக்குப் பகுதியில் மூன்று புதிய நிலையங்கள் இடம்பெறும்.
முக்கியமாக, அந்தப் பாதையின் இரண்டு முக்கியமான சுரங்கப் பாதைகளை வடிவமைக்கவும் கட்டவும் ஏலக்குத்தகை வழங்கப்பட்டுள்ளது. காலி பத்து பணிமனைக்கு இட்டுச் செல்லக்கூடிய சுரங்க வழி அது.
ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தூர சுரங்கப் பாதைகள் சுங்கை காடுட் அவென்யூ, சுங்கை காடுட் வே, உட்லண்ட்ஸ் ரோடு ஆகிய வட்டாரங்களின் நிலத்தடியில் 21 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படும்.
மேலும், அவை வடக்கு-தெற்கு ரயில் பாதைக்கு அருகே கட்டப்படும் என்றும் டௌன்டவுன் ரயில் பாதையை அந்தச் சுரங்கப் பாதைகள் இணைக்கும் என்றும் ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
டெளன்டவுன் ரயில் பாதை நீட்டிப்பு நிறைவடைந்த பின்னர், வடக்கு-மேற்கு வட்டாரத்திற்கான ரயில் தொடர்பு மேம்படும் என்றும் அது தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அதன்மூலம் சிங்கப்பூரின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளுக்குப் பயணம் செய்வோரின் பயண நேரம் குறையும் என்றது ஆணையம்.
“தற்போதைய மற்றும் புதிதாக வளர்ச்சி காணும் இயூ டீ, வருங்கால சுங்கை காடுட் சுற்றுச்சூழல் வட்டாரம் ஆகியவற்றுடன் ரயில் பசுமைப்பாதை, பாங் சுவா பூங்கா இணைப்பு போன்ற வசதிகள் இணைந்து மேம்பட்ட பயண அனுபவத்தை புதிய நீட்டிப்பு வழங்கும்,” என்று ஆணையம் தெரிவித்தது.
வோ ஹப் எஞ்சினியரிங் கட்டுமான நிறுவனம், மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இந்த ஏலக்குத்தகை வழங்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளால் அருகில் உள்ள கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை இயன்றவரை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அமல்படுத்த குத்தகை நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் ஆணையம் கூறியது.

