ஸ்கூட் விமானத்தில் சிப்பந்தியாக வேலை செய்தபோது உணவு, பான விற்பனைமூலம் கிடைத்த கிட்டத்தட்ட 40,000 வெள்ளி ரொக்கத்தை லுக்மான் ஹக்கிம் ஷாஃபாவி கையாடினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது குற்றத்தைத் தானாக முன்வந்து 31 வயது லுக்மான் ஒப்புக்கொண்டார்.
அதையடுத்து, ஸ்கூட் நிறுவனம் காவல்துறையிடம் புகார் கொடுத்தது. பின்னர் லுக்மான் கைது செய்யப்பட்டார். தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், கையாடல் செய்த பணத்தை முழுமையாகத் திருப்பித் தர லுக்மான் முன்வந்துள்ளார். இதுவரை 10,000 வெள்ளியை அவர் திருப்பிக் கொடுத்துள்ளார்.
மீதித் தொகையைக் கொடுக்க கொஞ்ச கால அவகாசம் வேண்டும் என்று நீதிமன்றத்தில் லுக்மன் கேட்டுக்கொண்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, லுக்மானுக்கு மார்ச் 27ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்தார். தற்போது லுக்மான் $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டார்.
லுக்மான் 366 முறை விமானங்களில் உணவு மற்றும் பானங்கள் விற்பனை மூலம் கிடைத்த தொகையைக் கையாடல் செய்துள்ளார். 2023 ஜூலை மாதத்திற்கும் 2025 மார்ச் மாதத்திற்கும் இடையில் அவர் அக்குற்றச் செயல்களில் ஈடுபட்டார்.

