சிங்கப்பூரில் காற்றுத் தரம் மேலும் மோசமடைந்தது

சிங்கப்பூரில் காற்றுத் தரம் மேலும் மோசமடைந்தது

படம்: சாவ்பாவ்

09 Oct 2026 - 9:41 am

2 mins read

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9), காற்றுத் தரம் மேலும் மோசமடைந்தது.

மத்திய வட்டாரத்தில் இரவு 8 மணி நிலவரப்படி, 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ) 192ஆகப் பதிவானது. இதுவே 2026ஆம் ஆண்டில் பதிவான ஆக அதிக அளவாகும். இதற்குமுன் செப்டம்பர் 29ஆம் தேதி, மத்திய வட்டாரத்தில் அக்குறியீடு 167ஆகப் பதிவானதே அதிகபட்ச அளவாக இருந்தது.

மத்திய வட்டாரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு வெள்ளிக்கிழமை காலை முதல் சிறிது சிறிதாக அதிகரித்துவருகிறது. தீவின் வட பகுதிகளில் குறியீடு 135ஆகவும் தெற்கில் 166ஆகவும் கிழக்கில் 170ஆகவும் மேற்கில் 186ஆகவும் பதிவானது.

பிஎஸ்ஐ குறியீடு 101 முதல் 200 வரை இருந்தால் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியதாகக் கருதப்படும். சிங்கப்பூரின் அனைத்துப் பகுதிகளிலும் பிஎஸ்ஐ அளவு தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையிலேயே நீடித்து வருகிறது.

காலை 9 மணிக்கு பிஎம்2.5 அளவுகளும் சிங்கப்பூர் முழுவதும் உயர்ந்து காணப்பட்டன. உடனடியாகக் காற்றின் தரத்தைத் தெரிந்துகொள்ள பிஎம்2.5 அளவு பயன்படுகிறது.

இந்தோனீசியாவின் சுமத்ரா, மேற்குக் கலிமந்தான் பகுதிகளிலிருந்து அடர்ந்த புகைமூட்டம் சிங்கப்பூரை நோக்கி நகர்வதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

பிஎஸ்ஐ ஆரோக்கியமற்ற வரம்பில் இருக்கும்போது பொதுமக்கள் நீடித்த அல்லது கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள், நாட்பட்ட நுரையீரல் அல்லது இதய நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள் வெளிப்புறச் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்