பிஎஸ்எல்இ தேர்வில் 98.5% மாணவர்கள் தேர்ச்சி

3 mins read
a1c539f6-c927-40c0-a55e-d984907b25c3
பிஎஸ்எல்இ தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) காலை வெளியிடப்பட்டன. - படம்: இணையம்

இவ்வாண்டு தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) எழுதிய மாணவர்களில் 98.5 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்று, உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல தகுதிபெற்றுள்ளனர்.

பிஎஸ்எல்இ தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) காலை வெளியிடப்பட்டன.

இவ்வாண்டு மொத்தம் 37,926 மாணவர்கள் பிஎஸ்எல்இ தேர்வெழுதினர் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகமும் ஒரு கூட்டறிக்கை மூலமாகத் தெரிவித்தன.

முழுப் பாட அடிப்படையிலான கற்றல் பிரிவின்கீழ், தகுதிபெற்ற மாணவர்கள், தங்கள் அடைவுநிலைகளின் (AL) அடிப்படையில், உயர்நிலை ஒன்றில் ஆங்கிலம், தாய்மொழி, கணிதம், அறிவியல் பாடங்களை அதிக சவாலான நிலையில் எடுக்கலாம்.

தரநிலைப் (standard) பாடத்தில் ஏஎல் 5 அல்லது அதைவிட சிறப்பாகப் பெற்ற மாணவர்கள் அந்தப் பாடத்தை ஜி3 அல்லது ஜி2 நிலையில் எடுக்கலாம்.

தரநிலைப் பாடங்களில் ஏஎல்  6 எடுத்தவர்கள் அல்லது அடிப்படைப் பாடங்களில் ஏஎல் ஏ எடுத்தவர்கள் ஜி2 நிலையில் எடுக்கலாம்.

மாணவர் சேர்க்கை (posting) குழு 1 மற்றும் 2க்குத் தகுதிபெற்ற மாணவர்களில் கிட்டத்தட்ட 65 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு பாடத்தையாவது அதிக சவாலான நிலையில் எடுக்கலாம். இது கடந்த ஆண்டு மாணவர் குழுவுடன் ஒப்பிடத்தக்கது எனத் தேர்வு, மதிப்பீட்டுக் கழகமும் கல்வி அமைச்சும் தெரிவித்தன.

தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்நிலை 1 சேர்க்கைக்கான இணையவாயில் வழியாக விண்ணப்பம் செய்யலாம். மாணவரின் பெற்றோரில் ஒருவர் சிங்பாஸ் மூலம் அந்த இணையவாயிலுக்குச் சென்று, தாங்கள் விண்ணப்பம் செய்ய விரும்பும் பள்ளிகளைத் தெரிவுசெய்ய வேண்டும். டிசம்பர் 1ஆம் தேதி மாலை 4.30 மணிக்குள் அதனைச் செய்ய வேண்டும்.

உயர்நிலை 1 சேர்க்கைக்கான முடிவுகள் டிசம்பர் 18 அல்லது 19ஆம் தேதி வெளியாகும். முடிவுகளை உயர்நிலை 1 சேர்க்கை இணையவாயில், குறுஞ்செய்தி அல்லது மாணவர் பயின்ற தொடக்கப் பள்ளி மூலமாக அறிந்துகொள்ளலாம்.

உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லத் தகுதிபெறாதவர்கள் அடுத்த ஆண்டு மீண்டும் பிஎஸ்எல்இ தேர்வெழுதலாம்.

அவர்கள் அசம்ஷன் பாத்வே பள்ளி மற்றும் நார்த்லைட் பள்ளிக்கு விண்ணப்பிக்கலாம். அப்பள்ளிகள் அனுபவமிக்க, செயல்முறை அடிப்படையிலான கற்றல் அணுகுமுறையுடன் கூடிய தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்களை வழங்குகின்றன.

ஒருமுறை பிஎஸ்எல்இ தேர்வு எழுதியவர்கள் தங்கள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரையுடன் இந்தப் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இலக்கை எட்டிய மதரசா பள்ளிகள்

இவ்வாண்டு பிஎஸ்எல்இ தேர்வெழுதிய மதரசா பள்ளிகளைச் சேர்ந்த 332 மாணவர்களில் 99.1 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மதரசா இர்ஸ்யாத், மதரசா அல்சகோஃப், மதரசா அல்-மாரிஃப், மதரசா வாக் தஞ்சோங் ஆகிய நான்கு பள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்ட தேர்ச்சி விகிதங்களை எட்டியுள்ளன.

அதனால், கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் ‘நியமிக்கப்பட்ட பள்ளி’களாக அவை தொடரும்.

“கல்வியின் முக்கியக் கட்டத்தைக் கடந்துள்ள மதரசா பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துகள்,” என்று கூறிய முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், “தேசியப் பள்ளிகள், மதரசா என எங்குப் பயின்றாலும் மாணவர்களின் வலிமையையும் திறனையும் கண்டறிந்து, சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்களிக்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன,” என்றும் சொன்னார்.

கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து மதரசா பள்ளிகளின் பிஎஸ்எல்இ முடிவுகள் 90 விழுக்காட்டிற்கும் மேலாகவே உள்ளன.

குறிப்புச் சொற்கள்