இவ்வாண்டு தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வு (பிஎஸ்எல்இ) எழுதியோரில் 98.5 விழுக்காட்டு மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லத் தகுதிபெற்றுள்ளதாகக் கல்வி அமைச்சும் சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகமும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) தெரிவித்துள்ளன.
பிஎஸ்எல்இ முடிவுகள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கநிலை 6ஆம் வகுப்பு மாணவர்கள் 40,906 பேர் தேர்வு எழுதினர்.
2026 பிஎஸ்எல்இ தேர்வு எழுதிய மாணவர்களில், பிரிவு 1, பிரிவு 2க்குத் தகுதியுள்ள மாணவர்களில் கிட்டத்தட்ட 64 விழுக்காட்டினர், சவால்மிக்கதாகக் கருதப்படும் குறைந்தது ஒரு பாடத்தையேனும் எடுக்கலாம். இது முந்தைய ஆண்டின் மாணவர்களுடன் ஒப்பிடத்தக்கது என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகமும் தெரிவித்துள்ளன.
பிரிவு 1, பிரிவு 2 என்பது உயர்நிலைப் பள்ளி நுழைவுக்கான பிஎஸ்எல்இ தகுதி நிலைகளாகும். இரு பிரிவுகளுக்கும் தகுதியுடைய மாணவர்கள் உயர்நிலை 1ஆம் வகுப்பு முதல் ஆங்கில மொழி, தாய்மொழிகள், கணிதம், அறிவியல் பாடங்களை சவால்மிக்க தரத்தில் எடுக்கலாம்.
உயர்நிலைப் பள்ளியில் நுழைவதற்குத் தகுதிபெறாத மாணவர்கள் அடுத்த ஆண்டு பிஎஸ்எல்இ தேர்வை எழுதலாம்.
இயல்பான உயர்நிலைப் பள்ளிக்குத் தேர்வு பெறாத மாணவர்கள், அசம்ப்ஷன் பாத்வே பள்ளி, நார்த்லைட் பள்ளிக்கு விண்ணப்பிக்கலாம். இது தனிப்பயனாக்கப்பட்ட கல்வித் திட்டங்களை ‘அதிக அனுபவமிக்க, கற்றல் அணுகுமுறையுடன்’ வழங்குகிறது.
பிஎஸ்எல்இ தேர்வை ஒருமுறை எழுதியவர்கள் தங்கள் தொடக்கப் பள்ளி முதல்வரின் பரிந்துரையுடன் இந்தப் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
உயர்நிலைப் பள்ளி பதிவு
உயர்நிலைப் பள்ளித் தெரிவுகளைச் சமர்ப்பிப்பதற்கான உயர்நிலை 1 விருப்பப் படிவம், தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பிஎஸ்எல்இ முடிவுகளுடன் வழங்கப்படும்.
நவம்பர் 24ஆம் தேதி காலை 11.30 மணி முதல் நவம்பர் 30ஆம் தேதி மாலை 4.30 மணி வரை கல்வி அமைச்சின் உயர்நிலை 1 பள்ளிக்கான இணையத்தளம் மூலம் தங்கள் விருப்பங்களை பெற்றோர்கள் சமர்ப்பிக்கலாம்.
மாணவர்களின் கல்வித் தேவைகள், வலிமை, ஆர்வங்களுக்குப் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து, உயர்நிலைப் பள்ளிகளை முழுமையாகக் கருத்தில்கொள்ளுமாறு மாணவர்களையும் பெற்றோர்களையும் கல்வி அமைச்சும் சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகமும் ஊக்குவித்துள்ளன.
