தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிமுக வேட்பாளர்கள் ஒத்த சிந்தனை உடையவர்கள் அல்லர்: டான் செங் போக்

3 mins read
a7be8f6d-63e2-4c18-a47b-9ac6be800896
தம் இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் சிமுக வேட்பாளர்களின் ஆற்றலைப் பற்றிப் பேசிய டாக்டர் டான் செங் போக் (வலமிருந்து 2வது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (சிமுக) வேட்பாளர்கள் ஒத்த சிந்தனை உள்ளவர்கள் அல்லர் என்றும் தங்கள் ஆற்றலை நிரூபித்தவர்கள் என்றும் அக்கட்சியின் தலைவர் டாக்டர் டான் செங் போக் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் வெவ்வேறு பின்னணிகளையும் அனுபவங்களையும் கொண்டவர்கள் என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.

ஜூரோங் வெஸ்ட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (மே 1) சிமுக நடத்திய இறுதித் தேர்தல் பிரசாரத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

“தொகுதியில்லா நாடாளுமன்ற வேட்பாளர்களாக லியோங் மன் வாயும் ஹேசல் புவாவும் தங்கள் திறன்களைக் காட்டியுள்ளனர்.

“சானி இஸ்மாயில் கூட்டுரிமை வீடுகள் நிர்வாகத்தில் அனுபவமிக்கவர். உங்கள் நகர மன்றம் நல்ல கைகளில் ஒப்படைக்கப்படும்.

“சிங்கப்பூரின் தொழில்நுட்ப எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்கவுள்ளவர் டோனி டான். ரோபாட் நாயைக் கொண்டு அசத்தியுள்ளவர்.

“திரு ஹரி‌ஷ் பிள்ளையும் செயற்கை நுண்ணறிவில் உலகளவில் நற்பெயர் பெற்றவர். பருவநிலை மாற்றம் குறித்து மசெகவைவிட ஜெஃப்ரி கூவுக்கு அதிகம் தெரியும். ஸ்டெஃபனி டான் இளம் பெற்றோரின் தேவைகளைப் புரிந்தவர்,” என்று டாக்டர் டான், தங்கள் வேட்பாளர்களின் வெவ்வேறு பின்னணிகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

மாறாக, மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளர்களிடையே ஒருமித்த சிந்தனை உள்ளது என்றும் அது நாட்டுக்கு ஆபத்தானது என்றும் அவர் கூறினார்.

“மசெக அதன் தலைமைத்துவத்தை மாற்றுவதில்லை. மறுசுழற்சி செய்கிறது. எப்பொழுதும் அரசாங்க ஊழியர்கள், ராணுவத்தினர் போன்றோரையே வேட்பாளர்களாக நிறுத்துகிறது. அவ்வாறிருக்க, அவர்கள் அனைவரும் ஒரே மாதிரிதான் சிந்திப்பார்கள். இது ஆபத்தானது. ஏனெனில், அவர்கள் தலைவர் சொல்வதை அப்படியே கேட்பார்கள்.

“சிமுகவிலோ நாங்கள் பல வகைகளிலும் சிந்திப்போம். நான் தலைவராக இருந்தாலும் என்னை எதிர்த்து கருத்து தெரிவிக்க தயங்கமாட்டார்கள். ஒரு தலைவர் எதிர்ப்புகளுக்கு அஞ்சினால், தலைவர் நம்மைப் பணியிலிருந்து நீக்கிவிடுவாரோ என்ற அச்சத்திலேயே யோசனைகள் விரிவடையாமல் முடக்கப்பட்டுவிடும்,” என்றார் டாக்டர் டான்.

அமைச்சர் பதவிக்குத் தகுதியானோரைக் கண்டுபிடிப்பதிலும் மசெக தடுமாறுவதாக அவர் குறிப்பிட்டார்.

“அமைச்சர் வலுவான முடிவுகளை எடுக்கவேண்டும். அலியான்ஸ் - இன்கம் சம்பவமே திரு இங் சீ மெங்கின் தரத்தை வெளிக்காட்டுகிறது,” என்று டாக்டர் டான் சுட்டினார்.

‘வெளிநாட்டவருக்கு எதிரான கட்சியன்று’

சிங்கப்பூரர்களின் தேவைகளை முன்னிலைப்படுத்துவதால் தம் கட்சி வெளிநாட்டவருக்கு எதிரானது என மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் உள்ளிட்ட பலரும் தவறாகப் புரிந்துகொள்வதாக டாக்டர் டான் கூறினார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.

“அப்போது, சிங்கப்பூரர்கள் பலரும் வேலைகளை இழக்கின்றனர் என்றும் சிங்கப்பூரர்களுக்கே முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் கூறினேன்.

“அதற்கு, பலரும் நான் வெளிநாட்டவரிடம் தவறான கருத்தைச் சொல்வதாகக் கூறினர். ஆனால் நான் ‘நீங்கள் சிங்கப்பூரர்களிடம் தவறான கருத்தைச் சொல்கிறீர்கள்’ என்றேன்,” என்று டாக்டர் டான் தெரிவித்தார்.

“இருப்பினும், சில வேலைகளை நம்மால் செய்ய முடியாது போனால் வெளிநாட்டவருக்குக் கொடுக்கவேண்டும். ஆனால், அவர்கள் இங்கிருக்கும்போது தம் அறிவை சிங்கப்பூரர்களுடன் பகிரவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் நெடுங்காலம் இங்குத் தங்கக்கூடாது,” என்றார் டாக்டர் டான்.

“இதுவே என் கடைசி பிரசாரக் கூட்டம். இங்கு வந்து பேசுவது எனக்கு உணர்வுபூர்வமான தருணம். இந்த வயதில் நான் உங்கள்முன் நின்று என் அணியைப் பற்றிக் கூறமுடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை,” என்றும் அவர் சொன்னார்.

தேர்தல் தொகுதி எல்லைகள் மறு ஆய்வுக்குப் பிறகு, 28,000 வாக்காளர்களை இழந்ததாகவும் அதற்குப் பதிலாக மசெகவுக்கு விசுவாசமான 41,000 வாக்காளர்களைப் பெற்றதாகவும் கூறினார் டாக்டர் டான்.

“குறுகிய காலத்தில் அவர்களின் ஆதரவை வெல்லவேண்டியிருந்தது. ஆனால் நான் ஜூரோங்கில் நடந்தபோது அனைத்தும் வீண்போகவில்லை என உணர்ந்தேன். அங்கிருந்த மக்களும் நானும் ஒரே கம்பத்திலிருந்து (kampong) வந்தவர்கள்,” என்றார் டாக்டர் டான்.

“நான்தான் நகர மன்றங்களைத் தொடங்கினேன். நான் நகர மன்றத் தலைவராக இருந்தபோது என் வங்கியில் எவ்வளவு இருந்தது என நான் பார்க்கவில்லை. நானும் என் மக்களும் எத்தனை வீடுகளுக்குச் சிறப்பாகச் சேவையாற்றினோம் என்பதையே பார்த்தேன். அதே போலச் சிமுக அணி மக்களுக்குச் சேவையாற்றும்,” என்றார் டாக்டர் டான்.

குறிப்புச் சொற்கள்