இரு தனித்தொகுதிகளில் மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளர்களுக்கு பாட்டாளிக் கட்சியினர் கடும் போட்டி கொடுக்கவுள்ளதாக பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் கூறியுள்ளார்.
வேட்புமனுத் தாக்கல் நாளான புதன்கிழமை (ஏப்ரல் 23) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது திரு சிங் இதனைத் தெரிவித்தார்.
“ஜாலான் காயு தனித்தொகுதியில் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாளர் போட்டியிடுகிறார். அதன் உதவித் தலைமைச் செயலாளர், தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதியில் போட்டியிடுகிறார். அவர்களுக்குக் கடும் போட்டி காத்திருக்கிறது. என்டியுசி, தனது வளங்களைப் பயன்படுத்தி மசெக வேட்பாளர்களை வெற்றிபெற வைக்கப் பாடுபடும்.
“இதுதான் பாட்டாளிக் கட்சி வேட்பாளரின் உண்மை நிலை. எல்லா இடங்களிலும் எங்களுக்குக் கடும் போட்டி காத்திருக்கிறது. ஒவ்வொரு வாக்கும் மதிப்புமிக்கது. அங்கு போட்டியிடும் இரண்டு தனிநபர்களும் தங்களுடன் ஏராளமானவற்றைக் கொண்டுவருகின்றனர். நாடாளுமன்றத்தில் அவர்கள் சிறந்த முறையில் பங்களிப்பர் என எண்ணுகிறேன். அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் வரவேண்டும் என்றும் விரும்புகிறேன்,” என்று திரு சிங் கூறினார்.
புதுமுகம் ஆண்ட்ரே லோ ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கேட்கப்பட்டதற்கு திரு சிங், “அவர் திறமையானவர்,” என்று திரு சிங் குறிப்பிட்டார்.
வேட்புமனுத் தாக்கல் நிலையங்களில் ஒன்றான டெயி உயர்நிலைப்பள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய திரு லோ, வேட்புமனுத் தாக்கல் நாளுக்கு முன்னதாகவே ஜாலான் காயு குடியிருப்பாளர்களைச் தாம் சந்தித்து வந்ததாகத் தெரிவித்தார்.
ஜாலான் காயுவில் எல்ஆர்டி நிலையங்கள், சிலேத்தார் கடைத்தொகுதி உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதுடன் அவர்களின் வீடுகளுக்கும் செல்லவிருப்பதாக திரு லோ கூறினார்.
மசெக வேட்பாளர் இங் சீ மெங் குறித்து கேட்டபோது, வேட்புமனுவைத் தாக்கல் செய்தபோது திரு இங்கும் தாமும் கைகுலுக்கிக்கொண்டதாக திரு லோ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“அவரை இப்போதுதான் நான் முதன்முறையாக நேரில் சந்திக்கிறேன். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டோம்,” என்று திரு லோ சொன்னார்.
தெம்பனிஸ் குழுத்தொகுதியிலிருந்து புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள தெம்பனில் சங்காட் தனித்தொகுதியில் மசெக சார்பில் திரு டெஸ்மண்ட் சூ போட்டியிடுகிறார். பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த கென்னத் ஃபூ அவரை எதிர்த்துக் களமிறங்கியுள்ளார்.