நாடாளுமன்ற நாயகர் பாரபட்சமின்றி சுயேச்சையாகச் செயல்பட நாடாளுமன்றத் தீர்மானம் தாக்கல்

நாடாளுமன்ற நாயகர் பாரபட்சமின்றி சுயேச்சையாகச் செயல்பட நாடாளுமன்றத் தீர்மானம் தாக்கல்

2 mins read
8ab4fe90-671c-4ed0-b86e-8e9d133cabfb
தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

நாடாளுமன்ற நாயகர் சுயேச்சையாகவும் பாரபட்சமின்றியும் இருக்கவேண்டிய அவசியத்தை மறுஉறுதிப்படுத்தும் தீர்மானத்தைத் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாயும் ஹேசல் புவாவும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்திற்காகத் தாக்கல் செய்துள்ளனர்.   

நாடாளுமன்றம் அனைவருக்கும் நியாயமான அரங்கமாக இருக்கவேண்டிய அவசியத்தையும் இந்தத் தீர்மானம் உறுதிசெய்யும் என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த இவ்விருவரும் கூறினர். 

நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் தகாத வார்த்தைகள் பேசிய விவகாரம் “நாடாளுமன்ற நடத்தை சம்பந்தப்பட்டது” என்பதால் அதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசப்படும் என்று அவைத் தலைவர் இந்திராணி ராஜா தெரிவித்த மறுநாள் இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம்மிடம் மன்ற நாயகர் மன்னிப்பு கேட்டிருந்தாலும், அவைத் தலைவர் இந்திராணி ராஜா இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசவிருந்ததாலும், இதனை “கடுமையான விவகாரமாக” சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி கருதுவதாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் கட்சி குறிப்பிட்டிருந்தது. 

நாடாளுமன்றம் அனைவருக்கும் நியாயமாக இருப்பதை உறுதிசெய்வது மன்ற நாயகரிலிருந்து தொடங்குவதாகவும் கட்சியின் அறிக்கை குறிப்பிட்டது. 

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் அறிக்கை வெளியான மூன்று மணிநேரத்துக்குப் பிறகு பட்டாளிக் கட்சி தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் நாடாளுமன்ற நாயகர் திரு டானின் செயல்பாடு வருத்தத்தை அளிக்கிறது என்று கூறியது.

நாடாளுமன்ற நாயகர் என்பவர் பாரபட்சமின்றி நாடாளுமன்றச் செயல்பாடுகளை நடத்தக்கூடியவர் என்று அனைவரது மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பாட்டாளிக் கட்சி தெரிவித்தது.

இவ்வாண்டு ஏப்ரல் 17ஆம் தேதி, நாடாளுமன்றக் கூட்டத்தில் பேராசிரியர் லிம் உரையாற்றி முடித்த பிறகு மன்ற நாயகர் திரு டான் தகாத வார்த்தைகளைப் பேசிய ஒளிப்பதிவு இவ்வாரத் தொடக்கத்தில் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதனைத் தொடர்ந்து திரு டான் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். 

அடுத்த நாடாளுமன்றக் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெறும். 

குறிப்புச் சொற்கள்