சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியிலும் சுவா சூ காங் குழுத்தொகுதியிலும் போட்டியிடப்போவதாகத் தெரிவித்துள்ளது.
இம்முறை அந்தக் கட்சி, கடந்த தேர்தலைக் காட்டிலும் குறைந்த எண்ணிக்கையில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) தெரிவித்தது.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய் இதனைத் தெரிவித்தார்.
வேட்பாளர்கள் குறைக்கப்பட்ட காரணம் குறித்து கேட்கப்பட்டபோது, தேர்தலில் போட்டியிடுவது சிக்கலான விவகாரம் என திரு லியோங் பதிலளித்தார். பிரசாரம் செய்வதற்கும் வாக்குகள் கேட்பதற்கும் தேவைப்படும் கடப்பாடுமிக்க தொண்டருக்கான பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் இருப்பதாக அவர் கூறினார்.
“நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது கடந்த தேர்தலிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டுள்ள பாடம்,” என்றார் அவர்.
மற்ற தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தொடர்ந்து பரிசீலிப்பதாக திரு லியோங் கூறினார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தேர்தல் அறிக்கை, செய்தியாளர் கூட்டத்தின்போது வெளியிடப்பட்டது. அக்கூட்டத்தில் திரு லியோங்குடன் கட்சித் தலைவர் டான் செங் போக்கும் துணைத் தலைவர் ஹேசல் புவாவும் இருந்தனர்.
வேலை, வாழ்க்கைச் செலவினம் போன்ற அன்றாடத் தேவைகளைத் தேர்தல் அறிக்கை சார்ந்திருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், பிரசார முழக்கவரி நான்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. ‘அனைவருக்கும் முன்னேற்றம்’ என்று தமிழில் வாசகம் இடம்பெறுகிறது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள முதல் சில கட்சிகளில் ஒன்றாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி விளங்குகிறது.
வாழ்க்கைச் செலவினம், வீடமைப்பு, வேலை, சம்பளம், சமூகப் பாதுகாப்பு, கல்வி, அரசாங்க மேலாண்மை உள்ளிட்ட தலைப்புகளைச் சார்ந்த 60 யோசனைகள அறிக்கை கொண்டுள்ளது.