சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (பிஎஸ்பி) தற்போதைய புதுப்பிப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, கட்சியின் இளைய உறுப்பினர்களுக்குப் பெரிய பொறுப்புகளை ஏற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிஎஸ்பியின் மத்தியச் செயற்குழுவில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இளம் தலைவர்கள் மிகவும் துடிதுடிப்பான, முன்களப் பதவிகளை ஏற்கும் வகையில் பொறுப்புகளும் கடமைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்று பிஎஸ்பியின் தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய் திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 27) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மத்தியச் செயற்குழுவில் புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களில் ஒருவரான சானி இஸ்மாயில், கட்சியின் ஏற்பாட்டுச் செயலாளர் மற்றும் களப்பணிகளுக்கான தலைவராக இருந்த பாங் இயூ ஹுவாட்டிடமிருந்து அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
உறுப்பினர் பிரிவின் தலைவராக இருந்த ஆண்டனி நியோவுக்குப் பதிலாக ஸுல்பாட்லி ஹசான் அப்பொறுப்பை ஏற்றுள்ளார்.
மேலும், கட்சி தனது தகவல் தொடர்பு மற்றும் கொள்கை சார்ந்த செயல்பாடுகளை வலுப்படுத்தி வருகிறது என்றும் அந்தந்தப் பிரிவுகளை வழிநடத்த வெண்டி லோ, லாரன்ஸ் பெக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் கட்சி விளக்கியது.
சேமுவல் லிம் தொடர்ந்து இளையர் அணியை வழிநடத்துவார் என்றும் சோ செங் லாங் துணை ஏற்பாட்டுச் செயலாளராக (தளவாடங்கள்) தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் கட்சி அறிவித்துள்ளது.
அதே வேளையில், கட்சி தற்போது பியூட்டி வோர்ல்டில் அமைந்துள்ள தனது தலைமையகத்தை, அதன் குத்தகைக் காலம் முடிவடைந்ததும் இடமாற்றம் செய்யவுள்ளது. புதிய தலைமையகம் எங்கு அமையும் என்பதைத் திரு லியோங் தெரிவிக்கவில்லை.
கட்சியின் உத்திபூர்வ, செயல்பாட்டுத் தேவைகள் குறித்த மதிப்பீட்டைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கட்சி கூறியது. மேலும், அடுத்து வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாகக் குடியிருப்பாளர்களுடனான ஈடுபாட்டைச் சிறப்பாக மேம்படுத்தக்கூடிய வகையில் புதிய அலுவலகம் அமையும் என்றும் அது குறிப்பிட்டது.

