சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி எதிர்வரும் பொதுத் தேதர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வெஸ்ட் கோஸ்ட்- ஜூரோங் குழுத்தொகுதியில் கடுமையான போட்டியை எதிர்நோக்கியுள்ளதாக அக்கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினரான லியோங் மன் வாய் தெரிவித்துள்ளார்.
தொகுதி வரையறைக்குப் பின் தாமான் ஜூரோங்கில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16ஆம் தேதி) தொகுதி உலா மேற்கொண்ட திரு லியோங், புதிய தொகுதியில் 41,000 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நாங்கள் பல்லாண்டுகாலமாக தெலுக் பிளாங்கா குடியிருப்பாளர்களுடன் அணுக்கமாகப் பழகி அவர்களுக்கு சேவையாற்றி உள்ளோம். ஆனால், அவர்கள் அகற்றப்பட்டுவிட்டனர்,” என்று அவர் விளக்கினார்.
மார்ச் மாதம் 11ஆம் தேதி புதிய மறுவரையறுக்கப்பட்ட தொகுதி எல்லை அறிவிப்பு குறித்து அவர் மேற்கண்டவாறு பேசினார்.
மறுவரையறுக்கப்பட்ட புதிய வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கு வலுவான தொகுதியான தற்போதைய ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியின் சில பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், தெலுக் பிளாங்கா, டோவர் தொகுதிகளின் சில பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு சிறிது கால அவகாசமே உள்ளது என்ற திரு லியோங், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஜூரோங் தொகுதிவாசிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். சிங்கப்பூரின் அடுத்த தேர்தல் இவ்வாண்டு நவம்பருக்குள் நடைபெற வேண்டிய நிலையில் அது இவ்வாண்டு மத்திமப் பகுதிவாக்கில் நடைபெறும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தலைவர் டான் செங் போக்கிற்கு தீவின் மேற்குப் பகுதியில் வலுவான ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்ட லியோங், தொகுதியில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுடன் தொடர்பு கொள்ள தமது கட்சி ஆன அனைத்தையும் செய்யும் என்றார்.