புக்கிட் கோம்பாக் தனித்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாக இருந்தாலும் அங்குக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேல் களப்பணி செய்துள்ளதால் தமக்கு நல்ல ஆதரவு இருப்பதாகச் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஹரிஷ் பிள்ளை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புக்கிட் கோம்பாக் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் திருவாட்டி லோ யென் லிங்கை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்.
சர்ச்சையான விவகாரங்களை மூடிமறைக்காமல் அதற்குத் தீர்வு காண்பதே தம்முடைய பாணி என்று கூறிய திரு ஹரிஷ், அன்றாட வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டினார்.
செலவுகளைச் சமாளிக்கப் பற்றுச்சீட்டுகள் கொடுப்பது நிரந்தர தீர்வாகாது என்றும் அவர் கூறினார். மூப்படையும் சமூகத்திற்கு ஏதுவாகச் சில வசதிகள் செய்துதர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
சாதகமான மாற்றம்
துணைப் பிரதமர் கான் கிம் யோங் முதலில் சுவா சூ காங் குழுத்தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது இடத்திற்கு மனிதவள அமைச்சர் டான் சீ லெங் மாற்றப்பட்டார்.
இந்தத் திடீர் மாற்றம் தங்களுக்குச் சாதகமான ஒன்று என்று கூறுகிறார் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் சி.நல்லகருப்பன்.
“திரு கானுக்கு சுவா சூ காங் வட்டாரத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது. அவர் தற்போது இங்குப் போட்டியிடாததால் தங்களுக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கலாம்,” என்றார் அவர்.
பொருள் சேவை வரியைக் குறைக்க வேண்டும் வீடுகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்று கூறிய திரு நல்லகருப்பன் இளையர்களின் வாக்குகளைப் பெறச் சமூக ஊடகத்தில் கட்சியின் கொள்கைகளைப் பரப்பி வருவதாகத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
போட்டியிடுவதே வெற்றிதான்
மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியில் பிரதமர் லாரன்ஸ் வோங்கை எதிர்த்து போட்டியிடுவதே தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்கிறார் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் அரிஃபின் இஸ்கண்டார்.
“பொதுவாகப் பிரதமர் வேட்பாளராக நிற்கும் தொகுதியில் 70 முதல் 80 விழுக்காடு வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க்கட்சிகள் தோற்கும். தோல்விபற்றி எங்களுக்குக் கவலை இல்லை. மக்களுக்குக் குரல் கொடுக்க விரும்புகிறோம்,” என்றார் திரு அரிஃபின்.