கொள்கை குறித்து விவாதிக்க சிமுகவின் சவாலுக்கு டெஸ்மண்ட் லீ பதில்

2 mins read
caf9bb6c-b88c-44a1-93df-00770bb0a065
வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு ஆதரவாளர்களை சந்தித்த வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியின் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள். - படம்: த. கவி

வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கு (மசெக) எதிராகப் போட்டியிடும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (சிமுக), தேசியக் கொள்கைகள் குறித்து விவாதிக்க தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தலைமையிலான மசெக அணிக்கு சவால் விடுத்துள்ளது.

வேட்புமனுத் தாக்கல் தினமான புதன்கிழமை (ஏப்ரல் 23) நன் ஹுவா ஹை பள்ளியில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவிட்டு ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசியபோது சிமுகவின் தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய் அந்தச் சவாலை விடுத்தார்.

வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு ஆதரவாளர்களைச் சந்தித்த வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியின் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வேட்பாளர்கள்.
வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு ஆதரவாளர்களைச் சந்தித்த வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியின் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வேட்பாளர்கள். - படம்: த. கவி

அதற்குப் பதிலளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமைச்சர் லீ, மசெக அதன் கொள்கைகள் குறித்த விவரங்களை ஏற்கெனவே தேர்தல் அறிக்கையிலும் வேட்பாளர்களின் தொகுதி உலாக்களிலும் தெளிவாக வெளியிட்டுள்ளதாகக் கூறினார்.

களப்பணியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் அரசியல் கட்சிகள், குடியிருப்பாளர்களுக்குப் பயனளிக்கும் விதமாக திட்டங்களை விவரமாக முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக திரு லியோங், “திரு டெஸ்மண்ட் லீயையும் அவரது குழுவினரையும் நாங்கள் கொள்கைகள் குறித்து விவாதம் செய்ய அழைப்பு விடுக்கிறோம். எந்தக் கட்சிக்குச் சிறந்த திட்டங்கள் உள்ளன என்பதை வாக்காளர்கள் முடிவு செய்யட்டும்,” என்று கூறியிருந்தார்.

வேட்புமனுவைத் தாக்கல் செய்த பிறகு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வேட்பாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

விவாதம் குறித்து பேசிய திரு லியோங், தேர்தலில் இரு கட்சியினரும் கொள்கைகள் பற்றி விவாதிப்பது சிறந்த போட்டிக்கு அழகு என்றும் சிமுகவின் அறிக்கை மிக வலுவாக உள்ளதாகவும் விளக்கியிருந்தார்.

தாமும் திருவாட்டி ஹேசல் புவாவும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்துள்ளதாகவும் திரு லியோங் சொன்னார்.

வேட்புமனுத் தாக்கல் தினத்தன்று டாக்டர் டான் செங் போக், 84, திரு லியோங், 65, திருவாட்டி புவா, 54, ஆகியோருடன் புதுமுகங்களான திரு சுமர்லேகி, 53, திரு சனி இஸ்மாயில், 49, இருவரும் வெஸ்ட் கோஸ்ட்- ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிடுவது உறுதிசெய்யப்பட்டது.

வெஸ்ட் கோஸ்ட்- ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியின் மசெக வேட்பாளர்களாகக் களமிறங்கும் அமைச்சர் லீ, நிதி, கல்விக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங், மூன்று தவணை நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வெய் நெங், புதுமுகங்களான டாக்டர் ஹமீது ரசாக், வழக்கறிஞர் கசேண்ட்ரா லீ ஆகிய ஐவரை எதிர்த்து அவர்கள் போட்டியிடுவார்கள்.

மசெக வேட்பாளர்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் டான், அவர்கள் வயதில் மிக இளமையானவர்கள் என்றும் குழுத்தொகுதி பற்றி தங்களைவிட அவர்களுக்குக் கூடுதல் விவரங்கள் தெரியுமா என்பது குறித்து சந்தேகம் எழுப்பினார்.

இளையர்கள் பலர் அரசியலில் ஈடுபட வேண்டுமென்ற திரு லியோங், கொள்கை பரிந்துரைமூலம் வரும் பொதுத் தேர்தலில் வெற்றி காண நம்பிக்கை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் முக்கியப் பங்கு, அவர் நாடாளுமன்றத்தில் கொள்கைகளை நன்கு விவாதிப்பதிலேயே அடங்கியுள்ளது. அதை வைத்துதான் வாக்காளர்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும்,” என்று திருவாட்டி புவா சொன்னார்.

குறிப்புச் சொற்கள்