சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் (PSP) சேர்ந்த குறைந்தபட்சம் மூன்று புதுமுகங்கள் பூன்லே வட்டாரத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) காணப்பட்டனர். அவர்களுடன் கட்சியின் துணைத் தலைவரான ஹேஸல் புவாவும் இருந்தார்.
திரு சேனி இஸ்மாயில், திரு சுமர்லேகி அம்ஜா, திருவாட்டி ஸ்டெஃபனி டான் ஆகியோர் அந்தப் புதுமுகங்கள். பூன் லே பிளேஸ் உணவங்காடி நிலையத்தில் அந்தக் கட்சியினர் நடத்திய தொகுதி உலாவின்போது அவர்களைக் காணமுடிந்தது. வரும் பொதுத் தேர்தலில் அவர்கள் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
அந்த மூவரில் திரு சேனி சட்ட ஆலோசகராக உள்ளார். திரு சுமர்லேகி முன்னாள் பாட்டாளிக் கட்சித் தொண்டர். டெல் மாண்டே பசிபிக் என்னும் உணவு, பான நிறுவனத்தின் வர்த்த மேம்பாட்டுத் தலைவராக அவர் உள்ளார்.
மூன்றாமவரான திருவாட்டி டான் இல்லத்தரசி. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர் அவர் என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் செய்திக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தொகுதி உலாவில் அந்தக் கட்சியின் 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் தொண்டர்களும் காணப்பட்டனர்.
கட்சி வகுத்திருக்கும் பல்வேறு யோசனைகள் அடங்கிய கையேடுகளை அவர்கள் குடியிருப்பாளர்களிடம் வழங்கினர்.
உணவு விலைகள், சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் போன்றவற்றைக் குறைப்பதன் மூலம் ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பதற்கான யோசனையும் அவற்றுள் அடங்கியுள்ளது.
பூன் லே வட்டாரம் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் அடங்கி உள்ளது. இது ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுத்தொகுதி ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி புவா, 2020 பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி சார்பில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் களமிறங்கியவர்.
அந்தத் தேர்தலில், முன்னாள் அமைச்சர் எஸ் ஈஸ்வரன், தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஆகியோரை உள்ளடக்கிய மக்கள் செயல் கட்சிக் குழுவிடம் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டது.