தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹவ்காங்கில் மாதைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுபவருக்கு மனநலப் பரிசோதனை

2 mins read
01904ef0-f513-445a-b776-285a1e8de190
மாண்ட டாவ் தி ஹோங் (இடம்), சந்தேக நபர் டூ ஸாய்சிங். - படங்கள்: சாவ்பாவ் / சாவ்பாவ் வாசகர்

ஹவ்காங்கில் மாது ஒருவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் டூ ஸாய்சிங் எனும் ஆடவர் வியாழக்கிழமை (டிசம்பர் 19) கூடுதல் மனநலப் பரிசோதனைக்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த அவர், டிசம்பர் 10ஆம் தேதி காலை 11.05 மணியளவில் புளோக் 210, ஹவ்காங் ஸ்திரீட் 21ன் தரைத்தளக் கடை ஒன்றில் திருவாட்டி டாவ் தி ஹோங்கைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

அந்த 34 வயதுப் பெண் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பற்றி நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

டூ கொலை செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

காணொளி இணைப்பு மூலம் அவர் வழக்கு விசாரணையில் கலந்துகொண்டார். அமைதியுடன் காணப்பட்ட அவருக்கு விசாரணை குறித்து, மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் மாண்டரின் மொழியில் மொழிபெயர்த்துக் கூறப்பட்டது.

டூவைச் சாங்கியில் உள்ள சிறைச்சாலை வளாக மருத்துவ நிலையத்தில் மனநல மதிப்பீட்டிற்காக மூன்று வாரங்கள் வைத்திருக்கக் காவல்துறை வழக்கறிஞர் விண்ணப்பித்தார்.

டூவின் வழக்கறிஞர் அதற்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. எனவே காவல்துறை வழக்கறிஞரின் விண்ணப்பத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

வழக்கு மீண்டும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி விசாரணைக்கு வரும்.

முன்னதாக, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அவரை விசாரணைக்காகக் குற்றம் நடந்த இடத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

டிசம்பர் 10ஆம் தேதி சம்பவ இடத்திலேயே டூ கைது செய்யப்பட்டார். சம்பவத்தில் அவருக்கும் காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் 26 வயது ஆடவர் ஒருவரும் கத்திக்குத்துக் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். திருவாட்டி டாவ் பின்னர் மருத்துவமனையில் மாண்டார்.

குறிப்புச் சொற்கள்