கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதியன்று படகு ஒன்று எண்ணெய்க் கப்பல் மீது மோதியதை அடுத்து, 400 டன்னுக்கும் அதிகமான எண்ணெய் சிங்கப்பூர் கடற்பகுதிகளில் கசிந்தது. அதனைத் தொடர்ந்து செந்தோசா, தெற்குத் தீவுகள் ஆகியவற்றில் நீர் நடவடிக்கைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
எண்ணெய்க் கசிவு காரணமாக ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, லெப்ரடோர் இயற்கை வனப்பகுதி, கெப்பல் பே, தெற்குத் தீவுகள், செந்தோசா ஆகியவற்றின் கடற்பகுதி பாதிப்படைந்தன.
எண்ணெய்க் கசிவுப் பணிகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் , நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் செந்தோசாவின் சிலோசோ கடற்பகுதி ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று பொதுமக்களுக்கு மீண்டும் திறந்துவிடப்பட்டது.
இதற்கிடையே, எண்ணெய்ச் சுத்திகரிப்புப் பணிகள் நிறைவுற்றதும், அதற்குத் தேவையான சாதனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு மீண்டும் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் நீரிலிருந்து எண்ணெய்யை உறிஞ்சும் மிதவைச் சாதனங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சாதனங்களை விநியோகிக்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க தேசிய பூங்காக் கழகம் ஜூலை 25ஆம் தேதியன்று ஏலத்துக்கு அழைப்பு விடுத்தது. 1.65 கிலோ மீட்டர் தூரத்துக்கு எண்ணெய்யை உறிஞ்சும் தன்மை உள்ள மிதவைச் சாதனங்கள் வாங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 200 லிட்டர் எண்ணெய்யை உறிஞ்சக்கூடிய மிதவைச் சாதனங்களை வாங்க இருப்பதாக கழகம் கூறியது.
கொள்முதல் உறுதி செய்யப்பட்டதும் சாதனங்கள் நான்கு வாரங்களுக்குள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று அது தெரிவித்தது.
ஏலத்துக்கான கடைசி நாள் ஜூலை 31.
தொடர்புடைய செய்திகள்
கடலில் கசிந்த எண்ணெய்யைச் சிறு துகள்களாக உடைத்துச் சிதறடிக்கும் ரசாயனத்தை வாங்க சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த ரசாயனம் கடலில் கசிந்த எண்ணெய் மீது பீய்ச்சியடிக்கப்படும்.
24,000 லிட்டர் ரசாயனத்தை விநியோகம் செய்யும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க ஏலத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆணையத்துக்குச் சொந்தமான சுற்றுக்காவல் படகுகள் இந்த ரசாயனத்தை வைத்திருக்கும்.
புதிய ரசாயனத்தை விநியோகம் செய்யும் நிறுவனத்துடன் ஆணையம் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறது.
ஏலத்துக்கான கடைசி நாள் ஆகஸ்ட் 19.
ஆக அண்மைய எண்ணெய்ச் சுத்திகரிப்புப் பணிகளில் தேசிய சுற்றுப்புற வாரியம், செந்தோசா மேம்பாட்டுக் கழகம் உட்பட பல அரசாங்க அமைப்புகள் ஈடுபட்டன.

