பொதுப் பேருந்துகளில் பயணம் செய்வோர் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்குச் சராசரியாக 3.82 மில்லியன் பயணங்கள் பதிவானதாக நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது. மாறாக, ரயில் பயணங்கள் உயர்ந்தன.
ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்துப் பயணங்கள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு முந்தைய காலக்கட்டத்துடன் ஒப்புநோக்க குறைவாக உள்ளது.
2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை சராசரியாக ஒரு நாளில் 7.66 மில்லியன் பயணங்கள் பதிவாகின. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு நாளில் சராசரியாகப் பதிவான பயணங்கள் எண்ணிக்கை 7.47 மில்லியன்.
பேருந்துகளை விடுத்து ரயில்களில் பயணம் செய்யும் போக்கு அதிகரித்திருப்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக நிபுணர்கள் கூறினர்.
நோய்ப்பரவலுக்கு முன் 2019ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் சராசரி பேருந்துப் பயணங்கள் 4.1 மில்லியன்.
பெருவிரைவு ரயில்கள், இலகு ரயில்கள் ஆகியவற்றின் பயணங்கள் 2024ஆம் ஆண்டுக்குப் பின் படிப்படியாகக் கூடியுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு நாளில் சராசரியாக 3.65 மில்லியன் ரயில் பயணங்கள் பதிவாகின. கடந்த ஆண்டு அதே காலக்கட்டத்தில் இருந்த 3.57 மில்லியனைவிட அது அதிகம்.
ஒப்புநோக்க, 2019ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 3.56 மில்லியன் ரயில் பயணங்கள் பதிவாகின.
தொடர்புடைய செய்திகள்
வார நாள்களின் காலை உச்சநேரத்தில் பொதுப் போக்குவரத்துப் பயணங்களின் எண்ணிக்கை கொவிட்-19 காலக்கட்டத்துக்கு முன்பிருந்ததைவிட குறைவாக உள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு முன் 1.55 மில்லியனாக இருந்த காலை உச்சநேரப் பயணங்களின் எண்ணிக்கை இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 1.48 மில்லியனுக்குக் குறைந்தது.
சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பின் முதுகெலும்பாக ரயில் கட்டமைப்பு தொடர்ந்து உருவெடுத்துவருவதால் தற்போதைய பயணப் போக்கு ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
நோய்ப்பரவலின்போது கூடுதலான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டதாலும் நீக்குப்போக்கான வேலை நேரங்களாலும் ரயில் பயணங்களின் எண்ணிக்கையில் பெரிய அளவு வளர்ச்சி இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

