உலகம் தொடர்ந்து மாற்றம் கண்டு வருகிறது, அது சிங்கப்பூரின் பொருளியல், வர்த்தகம், மக்கள்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
அதனால், சிங்கப்பூர் அதன் பொருளியல் அடிப்படைக் கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அரசாங்கம் - வர்த்தகச் சமூகங்களுக்கு இடையிலான பங்காளித்துவம் வலுவாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் வோங் கூறினார்.
சிங்கப்பூர்த் தொழில் சம்மேளனம் நடத்திய ‘சிங்கப்பூர் பட்ஜெட் கருத்தரங்கு 2025’ல் கலந்துகொண்டபோது இக்கருத்தை அவர் தெரிவித்தார். நிகழ்ச்சி மரினா பே சேண்ட்சில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) நடந்தது.
“தற்போது புவிசார் அரசியல் பதற்றமான சூழலில் உள்ளது, பொருளியல் நிச்சயமற்ற நிலையில் உள்ளது. இதனால் உலகச் சூழல் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. இதனால், சட்டங்கள் மதிக்கப்படாமல் போகும் நிலை ஏற்படக்கூடும்,” என்றார் திரு வோங்.
உலகத்தில் நடக்கும் நடவடிக்கைகளை நம்மால் மாற்ற முடியாது, ஆனால் அதற்குப் பதில் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்க முடியும். சிங்கப்பூரின் வணிகச்சார்பு சூழல், வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் திறந்த மனப்பான்மை உள்ளிட்டவை அதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகள் என்று பிரதமர் தெரிவித்தார்.
அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது உள்ளிட்ட, நீண்ட காலத்திற்குத் திட்டமிடுவதும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த முத்தரப்புப் பங்காளிகளான அரசாங்கம், தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு நன்றாக இருக்க வேண்டும், அது முன்பைவிட இப்போது மிகமுக்கியமானது என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.
தற்போது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பூசல் அதிகரித்துள்ளது. சீனா தமக்கு உத்திபூர்வமாக அச்சுறுத்தல் தரும் என்று அமெரிக்கா கருதுகிறது. மேலும், சீனா தன்னைவிடப் பெரிய பொருளியல் சக்தியாக மாறக்கூடாது என்பதிலும் அமெரிக்கா கவனம் செலுத்துவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
சீனாவும் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது. அமெரிக்கா வரி விதித்தால் அதற்குப் பதில் வரி விதிக்கத் தயாராக உள்ளது. இது வர்த்தகப் போரை உருவாக்கும் என்றார் திரு வோங்.
பெரிய நாடுகள் தங்களது பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் அதிகக் கவனம் செலுத்துகின்றன. தங்களது வெற்றிக்காக மற்ற நாடுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

