சட்ட அமைச்சின்கீழ் செயல்படும் பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம் கடந்த ஆண்டு டிசம்பரில் அதன் மூன்றாம் ஆண்டு நிறைவை எட்டியுள்ளது.
நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ளும் குறைந்த வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் சேவை வழங்குகிறது பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம்.
கடந்த மூவாண்டுகளில் அலுவலகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் அடிதடி, திருட்டு, போக்குவரத்து உள்பட பாலியல் ரீதியான குற்றங்களை எதிர்கொண்டோருக்கும் உதவியுள்ளனர்.
22 அரசாங்கத் தற்காப்பு வழக்கறிஞர்களைக் கொண்டுள்ள அலுவலகம், கடந்த ஆண்டு 508 வழக்குகளைக் கையாண்டது. 2023ஆம் ஆண்டில் அதிகமான வழக்குகளையும் 2024ஆம் ஆண்டு 400க்கும் அதிகமான வழக்குகளையும் அலுவலகம் கையாண்டது.
அலுவலகத்தில் சேவை வழங்கும் அரசாங்க வழக்கறிஞரும் மூத்த துணை இயக்குநருமான 38 வயது திரு அஷ்வின் கணபதி, அரசாங்க வழக்கறிஞராகக் குற்றத்தை எதிர்கொள்வோருக்கு நியாயமான தீர்ப்பு வழங்கப்படுவதில் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.
2024ஆம் ஆண்டு காவல்துறை அதிகாரியைத் தாக்கிய 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவருக்குச் சிறைத் தண்டனை கிடைத்திருக்கக்கூடும் என்று பகிர்ந்துகொண்டார் திரு அஷ்வின்.
ஆனால், ஆடவர் அப்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததையும் காவல்துறை அதிகாரியை அவர் தாக்கியதற்கு அதனால் ஏற்பட்ட விரக்தியும் காரணம் என்பதைத் திரு அஷ்வின் கண்டறிந்தார்.
நீதிமன்றத்தில் ஆடவரைப் பிரதிநிதித்த திரு அஷ்வின், சிறைத் தண்டனைக்குப் பதிலாக ஆடவருக்குக் கட்டாய சிகிச்சை உத்தரவு பிறப்பிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“ஆடவர் செய்த தவற்றை ஒப்புக்கொண்டதுடன் எத்தகைய மருத்துவப் பரிசோதனையையும் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறார் என்பதை நீதிபதியிடம் விளக்கினேன்,” என்றார் திரு அஷ்வின். அதையடுத்து கட்டாய சிகிச்சை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.
பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகத்தில் பணியாற்றுவது மனதிருப்தி அளித்தாலும் அதற்குரிய சவால்கள் இருக்கவே செய்கின்றன என்று ஒருசில வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.
வெவ்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் மனநலம் பாதிக்கப்பட்டோராக இருக்கலாம் என்றும் அத்தகையோரையும் கண்ணியத்துடன் நடத்துவது முக்கியம் என்றும் அவர்கள் கூறினர்.


