சிங்கப்பூரில் உள்ள மூன்று பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மின்சிகரெட் புகைத்தாலோ அல்லது வைத்திருந்தாலோ பணிநீக்கம் செய்யப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சிகரெட் பழக்கம் உள்ள ஊழியர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கட்டொழுங்கு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சிங்ஹெல்த், என்எச்ஜி ஹெல்த், தேசிய பல்கலைக்கழக சுகாதாரக் கட்டமைப்பு (என்யுஎச்எஸ்) ஆகியவை தெரிவித்துள்ளன.
முதல்முறை பிடிபடும் ஊழியருக்கு அதிகாரபூர்வமாக எழுத்துபூர்வ எச்சரிக்கை விடுக்கப்படலாம். தொடர்ந்து மின்சிகரெட் புகைக்கும், வைத்திருக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்.
போதைப்பொருள் கொண்ட மின்சிகரெட் புகைப்பவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்.
மின்சிகரெட் புகைப்போர், வைத்திருப்போருக்கு எதிராக அரசாங்கம் அறிவித்த நடவடிக்கைகள் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மின்சிகரெட் புகைப்பவர்களுக்குக் கூடுதல் அபராதமும் அவற்றை விநியோகிப்பவர்களுக்குக் கூடுதல் கடுமையான தண்டனையும் விதிக்கப்படும்.
மின்சிகரெட் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஏற்றவாறு தங்களது மனிதவளக் கொள்கைகளை மாற்றி அமைப்பதாகப் பொது மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள், தேசிய நிபுணத்துவ நிலையங்கள் ஆகியவற்றை நடத்தும் மூன்று பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களும் கூறின.
தனது கொள்கைகளையும் வழிகாட்டி நெறிமுறைகளையும் மறுஆய்வு செய்துள்ளதாக என்யுஎச்எஸ் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான தகவல்களை மின்னஞ்சல், சுவரொட்டிகள், மின்சுவரொட்டிகள், கூட்டங்களின்போது நேரடி நினைவூட்டல் ஆகியவை மூலம் ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளதாக அது தெரிவித்தது.
மின்சிகரெட் புகைப்பவர்கள், வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு எதிராகக் கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும் என்றும் சிங்ஹெல்த் கூறியது.
மின்சிகரெட் புகைக்கும், வைத்திருக்கும் ஊழியர்களுக்கு எதிராகக் கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்எச்ஜி ஹெல்த்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக என்எச்ஜி ஹெல்த்தின் மனிதவளக் கொள்கைகள் மாற்றியமைக்கப்படுவதாக அவர் கூறினார்.