‘பேர்ல்ஸ் ஹில்’ (Pearl’s Hill) வட்டாரத்தில் ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்குப் பின்னர் பொது வீடமைப்பு அமையவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் கட்டப்படவிருக்கும் 60 மாடிக் குடியிருப்பு, சிங்கப்பூரின் ஆக உயரமான பொது வீடமைப்புக் கட்டடமாக அமையும்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட், புதன்கிழமை (மார்ச் 4), அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசியபோது இதை அறிவித்தார்.
ஒற்றையர்கள், மூத்தோரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு 2026 முதல் 2028ஆம் ஆண்டுவரை, நீக்குப்போக்கான குத்தகையுடைய ஈரறை வீடுகளின் எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
தற்போதைய ஆக உயரமான பொது வீடமைப்புக் கட்டடமான ‘த பின்னக்கல் @ டக்ஸ்டன்’ குடியிருப்பைவிடக் குறைந்தது 10 மாடிகள் உயரமானதாகப் பேர்ல்ஸ் ஹில் வட்டாரக் குடியிருப்பு அமையும்.
“இது நிலப் பயன்பாட்டைத் தீவிரப்படுத்தி, உயரமான கட்டடங்களைக் கட்டுவதன் மூலம், அதிக அளவிலான பொது வீடுகளைக் கட்டுவதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சிகளின் ஒரு பகுதி,” என்றார் திரு சீ.
தற்போதுள்ள 40மாடி வீவக கட்டடங்களுடன் ஒப்பிடும்போது, இந்த 60மாடிக் கட்டடம் 50 விழுக்காடு கூடுதலான வீடுகளைக் கொண்டிருக்கும்.
ஊட்ரம் பார்க் பெருவிரைவு ரயில் நிலையத்துக்கு அருகில் அமையவுள்ள இப்புதிய குடியிருப்பில், நீக்குப்போக்கான குத்தகையுடைய ஈரறை வீடுகள், மூவறை, நான்கறை பிடிஓ வீடுகளுடன் பொது வாடகை வீடுகளும் அமைந்திருக்கும்.
சீனக் கலாசார ஓவியத்தின் அடிப்படையில் அமையும் இந்தக் குடியிருப்பு, பொது இடங்கள், பசுமைப் பூங்காக்கள், மாடித்தோட்டங்களுடன் அமைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
ஓவியங்களில் சித்திரிக்கப்படும் மலை முகடுகளைப்போல் வெவ்வேறு உயரங்களில் கட்டப்படும் குடியிருப்புகளிலிருந்து சுற்றியுள்ள பசுமையான இடங்களைப் பார்வையிடமுடியும்.
நகர வடிவமைப்பு வழிகாட்டிக் குறிப்புகளுக்கேற்ப, ஒளி, காற்றோட்டத்தை உறுதிசெய்யும் வகையில் கட்டடங்களுக்கிடையே 40 மீட்டர் இடைவெளி இருக்கும்.
“விமான நிலையத்துக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு விமானப் போக்குவரத்துத் துறை வகுத்துள்ள உயரக் கட்டுப்பாடுகள் காரணமாக, உயரமான கட்டடங்கள் பெரும்பாலும் மத்திய வட்டாரத்தில் அமைந்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில் செய்யப்பட்டுள்ள விதிமுறை மாற்றங்களையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் உயரமான வீடுகள் அமைக்கும் வாய்ப்புகளைப் பெறலாம். இது நிலப் பயன்பாட்டை அதிகரித்து, சிங்கப்பூரர்களின் வீட்டுத் தேவையை நிறைவேற்றவும் வழிவகுக்கும்,” என்றார் அமைச்சர் சீ.
தொடர்ந்து, வீவக இவ்வாண்டு கேல்டிகாட் பெருவிரைவு ரயில் நிலையத்துக்கு அருகில் புதிய பிடிஓ திட்டத்தைத் தொடங்கும் என்று அவர் அறிவித்தார்.
இதில், வாடகை வீடுகள், நீக்குப்போக்கான குத்தகையுடைய ஈரறை வீடுகள், நான்கறை வீடுகள், தோ பாயோ வட்டாரத்துக்கான முதல் சமூகப் பராமரிப்பு வீடுகள் உள்ளிட்ட 1,600 வீடுகள் இருக்கும். மேலும், குடியிருப்பாளர்களுக்கான பொது இடங்கள், அக்கம்பக்கப் பூங்கா, உணவங்காடிகளும் அமையவுள்ளன.
இங்குச் சமூகப் பராமரிப்பு வீடுகளில் உள்ள குடியிருப்பாளர்களுக்கான துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையமும் அமைக்கப்படும்.

