பருவநிலைத் தகவமைப்புத் திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கப் பொதுமக்களுக்கு அழைப்பு

பருவநிலைத் தகவமைப்புத் திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கப் பொதுமக்களுக்கு அழைப்பு

2 mins read
205a9f14-0687-4c7b-89ed-080e3a48e7fd
செந்தோசா கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற முதலாவது தேசியத் தகவமைப்புக் கலந்துரையாடலில் கல்வித்துறை, வணிகங்கள், சம்பந்தப்பட்ட தரப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முதலாவது பருவநிலைத் தகவமைப்புத் திட்டம் குறித்த தங்களது யோசனைகளையும் கருத்துகளையும் பொதுமக்கள் வியாழக்கிழமை (ஜூலை 30) முதல் பகிர்ந்துகொள்ளலாம்.

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நாட்டைப் பாதுகாப்பதற்கான நீண்டகால உத்தியை உருவாக்க அது அரசாங்கத்திற்கு உதவும்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் முதலாவது தேசியத் தகவமைப்புக் கலந்துரையாடலின் தொடக்க விழாவில் அந்த அழைப்பு விடுக்கப்பட்டது. பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு எதிராகச் சிங்கப்பூரின் மீள்திறனை வலுப்படுத்துவதில் உள்ள யோசனைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும் எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினரை ஒருங்கிணைக்கும் கலந்துரையாடல் தொடராக அது அமைகிறது.

சிங்கப்பூரின் பருவநிலைச் சவால்கள், வாய்ப்புகள் குறித்த முதல் கலந்துரையாடலுக்காக ஜூலை 30ஆம் தேதி வணிகங்கள், கல்வித்துறை, சமூகக் குழுக்கள், இளையர் அமைப்புகள், பொதுத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் செந்தோசாவில் ஒன்றுகூடினர்.

வரவிருக்கும் மாதங்களில், அந்தக் கலந்துரையாடல்கள் வெப்பம், கடலோரம், வெள்ளம், நீர், உணவு மீள்திறன்; நகர வாழ்வியல், உள்கட்டமைப்பு; பல்லுயிர்ச்சூழல், பசுமை; பொதுச் சுகாதாரம் உள்ளிட்ட முக்கியத் தகவமைப்பு அம்சங்களில் கவனம் செலுத்தும்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ அந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டார். அவர் ஆசியாவின் முதலாவது அனுபவபூர்வ பருவநிலைத் தகவமைப்பு நடுவமாக வர்ணிக்கப்படும் கல்வி மையத்துகான அடிக்கல்லை நாட்டினார்.

செந்தோசாவில் தற்போது செயல்பாட்டில் இல்லாத ‘சிஜோரி வண்டர்கோல்ஃப்’ திடலில் அமைந்துள்ள அந்தக் கல்வி மையம், இவ்வாண்டின் இறுதிக்குள் பொதுமக்களுக்கு இலவசமாகத் திறக்கப்படும்.

வாழ்விடங்களும் சுற்றுச்சூழலும், மாறிவரும் பருவநிலைக்கு ஏற்ப எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன என்பதை வருகையாளர்கள் நேரடியாக அறிந்துகொள்ள அது வழிவகுக்கும்.

கொள்கை வகுப்பாளர்கள், வர்த்தகத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோர் ஏற்கத் தயாராக இருக்கும் நடத்தை மாற்றங்கள் குறித்துத் தெளிவுபெற, அந்தக் கலந்துரையாடல்கள் உதவும் என்று அதில் பங்கேற்றவர்களிடம் அமைச்சர் ஃபூ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
பருவநிலைதிட்டம்கலந்துரையாடல்