சிங்கப்பூர் பொதுத்துறையின் கரியமில வாயு வெளியேற்றம் 2024ஆம் ஆண்டில் குறைந்துள்ளது.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு கரியமில வாயு வெளியேற்றம் 1.9 விழுக்காடு குறைந்துள்ளது.
இருப்பினும் வரும் ஆண்டுகளில் பொருள்களை எரித்துச் சாம்பலாக்கும் புதிய ஆலைகள் திறக்கப்பட்டால் கரியமில வாயு வெளியேற்றத்தின் அளவு அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் பொதுத்துறை அமைப்புகள் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் கரியமில வாயு வெளியேற்றத்தின் அளவு 9.5 விழுக்காடு குறைந்துள்ளதாகக் கிரீன்கவ் அமைப்பு (GreenGov) தனது ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டது.
கிரீன்கவ் அமைப்பு, சிங்கப்பூர் பொதுத்துறையின் கரியமில வாயு வெளியேற்றத்தை 2020ஆம் ஆண்டு முதல் கவனித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிக்கையைக் கிரீன்கவ் திங்கட்கிழமை (அக்டோபர் 6) வெளியிட்டது.
ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை பொதுத்துறையின் கரியமில வாயு வெளியேற்றம் 3.6 மில்லியன் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது சிங்கப்பூரின் மொத்த கரியமில வாயு வெளியேற்றத்தில் ஆறு விழுக்காடு ஆகும்.
துவாசில் உள்ள பொருள் எரிக்கும் ஆலைகளில் ஒன்று 2022ஆம் ஆண்டு மூடப்பட்டது. அதனால் நேரடி கரியமில வாயு வெளியேற்றக் குறைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும் துவாஸ் தெற்கில் உள்ள ஆலை பொருள் எரிக்கும் வேலைகளைக் குறைத்துள்ளது. அதுவும் நேரடிக் கரியமில வாயு வெளியேற்றக் குறைவுக்குக் காரணமாக உள்ளது.
துவாஸ் நெக்சஸ் ஆலை திறக்கப்படும்போது நேரடிக் கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலை 2027ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு தெரிவித்துள்ளது.