நான்கு உயரிய விருதுகளை வென்றது ‘என்எச்ஜி ஹெல்த்’

பொதுத்துறை உருமாற்ற விருதுகள் 2026

நான்கு உயரிய விருதுகளை வென்றது ‘என்எச்ஜி ஹெல்த்’

2 mins read
44bfb089-3309-459a-8b1a-829e489afc71
மனநலம், சமூக ஈடுபாடு, மருத்துவப் பராமரிப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகிய துறைகளில் சிறப்பாகச் சேவை வழங்கியதற்காக ‘என்எச்ஜி ஹெல்த்’ நான்கு விருதுகளை வென்றது. - படம்: விக்கிப்பீடியா

சிங்கப்பூரின் பொதுத்துறை உருமாற்ற (பிஎஸ்டி) விருதுகள் 2026 நிகழ்ச்சியில், மனநலம், சமூக ஈடுபாடு, மருத்துவப் பராமரிப்பு,  சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகிய துறைகளில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக ‘என்எச்ஜி ஹெல்த்’ நான்கு முக்கிய விருதுகளைப் பெற்றது.

வெள்ளிக்கிழமை (ஜூலை 3) நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் தற்காப்பு அமைச்சருமான சான் சுன் சிங் இவ்விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

விருது பெற்ற முக்கியத் திட்டங்கள்

‘மைண்ட்லைன் 1771’ எனும் தேசிய அளவிலான மனநலம் சார்ந்த உதவி எண் சேவைக்கு ‘டேர் டு டூ’ (Dare to Do) எனும் துணிவுடன் செயலாற்றியதற்கான விருது வழங்கப்பட்டது. சுகாதார அமைச்சின்  ஆதரவோடு மனநலக் கழகத்தால் இயக்கப்படும் இச்சேவை, சிங்கப்பூரின் முதல் 24/7 மனநல உதவி அழைப்பு மற்றும் குறுஞ்செய்திச் சேவையாகும். கடந்த 2025 ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இது 39,000க்கும் மேற்பட்ட அழைப்புகளைக் கையாண்டுள்ளது.

நிகழ்ச்சியில், ‘குடிமக்கள் ஈடுபாடு உன்னத விருது’ ‘என்எச்ஜி ஹெல்திவெர்ஸ்’க்கு கிடைத்தது.  சமூக அளவிலான உடற்பயிற்சி, விளையாட்டு நடவடிக்கைகள் மூலம் குடியிருப்பாளர்களைத் தங்களின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த ஊக்குவித்ததற்காக   இந்த முதன்மைச் சுகாதாரத் திருவிழாவிற்கு இவ்விருது கிடைத்தது. இத்திட்டம் மூத்தோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் பரவலாகச் சென்றடைந்தது. 2025 அக்டோபரில் 36,000க்கும் அதிகமான பங்கேற்பாளர்களையும் ஈர்த்தது.

புனிதப் பயணம் சார்ந்த முதலாம் நீரிழிவு நிர்வாகத் திட்டத்தை உருவாக்கியதோடு, நோன்பு மாதத்திற்கான சிறப்புத் திட்டங்கள் தொடங்கியதில் முன்னோடியாகத் திகழ்ந்து முனைப்புடன் பங்காற்றிய கூ டெக் புவாட் மருத்துவமனையின் மேல்நிலைச் செவிலியரான திருவாட்டி மரியானா மகதிக்கு முழு அரசாங்கச்  சேவை விருது கிடைத்தது.

பொதுத்துறைக்கான உருமாற்ற விருது நிகழ்ச்சியில் ‘கிரீன்கவ்’  உன்னத விருதை வென்றது டான் டோக் செங் மருத்துவமனை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலைத்தன்மையைச் செயல்பாடுகளில் வெற்றிகரமாகப் புகுத்தியதற்காக அதற்கு இவ்விருது வழங்கப்பட்டது.

நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல், நீர்ச் சேமிப்பு, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் ‘டிடிஎஸ்எச்’ மருத்துவமனை குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த விருதுகள் ‘என்எச்ஜி ஹெல்த்’திற்கு ஒரு பெருமையான தருணம்,” என்று தெரிவித்தார் அதன் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் ஜோ சிம்.

நோயாளிகள், குடியிருப்பாளர்களை மையமாகக் கொண்டு தங்களது குழுக்கள் மருத்துவச் சேவைகளை மறுவடிவமைப்பு செய்து வருவதையும் இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கிறது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
சுகாதாரம்விருதுஅங்கீகாரம்