குடிமக்கள் நலன் மீது பொதுச் சேவை ஊழியர்களிடம் முக்கியத்துவம் இருக்கவேண்டும் என்று பொதுச் சேவைக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்தியுள்ளார். எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளவும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படவும் இது அவசியம் என்று தற்காப்பு அமைச்சருமான திரு சான் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) கூறினார்.
வாழ்க்கைத் தரம், அரசாங்க சேவைகள் ஆகியவை தொடர்பாக சிங்கப்பூர் பெருமை கொள்ளலாம் என்றார் அமைச்சர் சான்.
ஒன் பொங்கோலில் பொதுச் சேவைத் துறை உருமாற்று விருதுகள் நிகழ்ச்சிக்கு முன்னதாக இந்தக் கருத்துகளை அவர் முன்வைத்தார். மெத்தனப்போக்கு இருக்கக்கூடாது என்று திரு சான் எச்சரிக்கை விடுத்தார். அண்டை நாடுகள் உட்பட மற்ற நாடுகளும் முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார்.
“இவ்வளவு காலம் சிங்கப்பூருக்குப் பின்னால் இருந்ததாகக் கருதப்படும் நாடுகள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நம்மை முந்திக்கொண்டு செல்ல நேரிடலாம். எனவே, சிங்கப்பூர் மெத்தனத்துடன் இருக்கும் இடத்திலேயே இருந்துவிடக்கூடாது,” என்றார் அமைச்சர் சான். தொடர்ந்து முன்னேறுவது மிகவும் முக்கியம் என்றார் அவர்.
“100வது தேசிய நாளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். இவ்வளவு காலம் சிறப்பாகச் செயல்பட்ட அம்சங்களில் நமது முயற்சி இரட்டிப்படைய வேண்டும். சிங்கப்பூரர்களுடன் இணைந்து புத்தாக்கத்துடன் செயல்பட வேண்டும்,” என்று அரசாங்க ஊழியர்களிடம் அவர் தெரிவித்தார்.
‘ஒன் பப்ளிக் சர்விஸ்’ மேம்பாட்டுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றார் அமைச்சர் சான்.
குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்க பல்வேறு அரசாங்க அமைப்புகளிடையிலான ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றை இந்த ‘ஒன் பப்ளிக் சர்விஸ்’ ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக அரசாங்க ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்குவது முக்கியம் என்றார் அவர்.
“இருப்பில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அதிகபட்ச பலன்களை ஏற்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதற்கான புதிய வாய்ப்புகளைத் தேட வேண்டும்,” என்று அமைச்சர் சான் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
உலகளாவிய போட்டித்தன்மை தீவிரமடைவது மட்டுமன்றி, சிங்கப்பூர் எதிர்நோக்கும் மற்ற சவால்களையும் அவர் பட்டியலிட்டார். பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பதும் அவற்றில் அடங்கும். சிங்கப்பூரின் மூப்படையும் மக்கள்தொகையை அவர் சுட்டினார். 2030ஆம் ஆண்டுக்குள் நான்கில் ஒரு சிங்கப்பூரர் 65 வயதுக்கும் மேல் இருப்பர். 1965ஆம் ஆண்டில் நாற்பதில் ஒரு சிங்கப்பூரருக்கு 65 வயதுக்கும் மேலாக இருந்தது.
“மூப்படைதல் காரணமாக சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புச் செலவினம் பத்தாண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது மும்மடங்கு உயரும். இது சிங்கப்பூரின் நிதிநிலையைப் பேரளவில் இறுக்கும்,” என்று திரு சான் கூறினார்.
எதிர்கொள்ள வேண்டிய சவால்களில் பருவநிலை மாற்றமும் கரிமம் தொடர்பான வரவுசெலவுத் திட்டமும் அடங்கும் என்றார் அவர்.
“பல சவால்கள் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. எனவே, தீர்வுகள் ஒட்டுமொத்தமாக உருவாக்கப்பட வேண்டும்,” என்று அமைச்சர் சான் கூறினார்.

