தேர்தலில் குறைந்த பெரும்பான்மை கிடைத்தால் அரசுக்கு செயல்படுத்தும் அதிகாரம் குறையும். அரசாங்கம் முடிவெடுப்பதில் குறுகியகால நோக்கத்தைத் தவிர்ப்பது கடினமாகும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் எச்சரித்துள்ளார்.
“இதனால் ஏற்படும் அபாயத்தைச் சிங்கப்பூரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதுபோல்தான் பொதுச் சேவையும்,” என்றார் அவர். புவன விஸ்தா ஸ்டார் தியேட்டரில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) நடைபெற்ற வருடாந்திர அரசாங்கச் சேவை தலைமைத்துவ நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் லீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
சிங்கப்பூரின் பொதுச் சேவை, அரசியல் தலைவர்கள், இரண்டுக்கும் இடையிலான உறவு ஆகியவை குறித்து அவர் தமது உரையில் விவரித்தார்.
புதிய தலைமுறை அரசியல் தலைவர்களுடன் பொதுச் சேவையுபம் தனது உறவை புதுப்பித்துக்கொள்ளும் வேளையில், மாறிவரும் உலகில் சிங்கப்பூர் தனது அமைப்புகளை புதுப்பிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறது. நல்ல கொள்கைகளும் நல்ல அரசியலும் தொடர்ந்து முக்கியமானதாக இருக்கும் என்று திரு லீ கூறினார்.
சரியான கொள்கைகளை வடிவமைத்து செயல்படுத்துவதற்கான திறன், செயல்பாட்டு அறிவுடன், உரிய பண்புகள், நெறிமுறைகளால் இயக்கப்படும் பொதுச் சேவையை நாடு கொண்டிருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மேம்படுத்தி, புதுப்பிப்பதும் முக்கியர்..
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி, அவர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற அரசியல் உறுதிப்பாடும் நம்பிக்கையும் மக்களுடன் தொடர்பும் கொண்ட அரசியல் தலைமைத்துவத்துடன் அரசு ஊழியர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
உலகில் மிகவும் அரிதானதை, நல்ல அரசாங்கம், நிலையான முன்னேற்றத்தை செய்து காட்ட முடியும் என்று சிங்கப்பூரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என்று மூத்த அமைச்சர் கூறினார். இவை நாட்டு உருவாக்கத்தின் தொடக்க காலத்திலிருந்து சிங்கப்பூரின் வெற்றிக்கு பங்களித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
கொள்கைகளை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் பொதுச் சேவை முக்கிய அக்கறை கொண்டிருக்க வேண்டும். இது மிகவும் கடுமையான பணி.
தொடர்புடைய செய்திகள்
கடின உழைப்பு இல்லாட்டால், இலக்குகளும் லட்சியங்களும் வெற்று முழக்கங்களாகவே இருக்கும். அரசாங்கம் சிங்கப்பூரர்களுக்கு வேண்டியதை வழங்கத் தவறிவிடும். இது, திறமையான, நிபுணத்துவம்மிக்க, உயர்தர அரசாங்கச் சேவையின் முக்கியத்துவதை வலியுறுத்துகிறது.
அதேவேளையில், அரசாங்கச் சேவை பாரபட்சமின்றி அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் திரு லீ எச்சரித்தார்.
அமைச்சர்கள் கொள்கைகளில் தேர்ச்சி பெறுவது முக்கியம்
சிங்கப்பூரின் அரசியல் தலைமைத்துவம் அரசியல் அம்சங்களில் அக்கறை கொண்டுள்ளது. அமைச்சர்கள் நாடு, குடிமக்களின் சிறந்த நலன்களைக் கருத்தில் கொண்டு நாட்டிற்கான இலக்கை நிர்ணயிக்கின்றனர்.
நாட்டின் எதிர்காலம் குறித்த அரசியல் தெரிவுகளைச் செய்கின்றனர். அரசியல் போட்டியில் தங்களுக்கென ஓர் இடத்தைப் பிடிக்கின்றனர்.
எனவே அமைச்சர்கள் திறம்பட செயல்பட, அமைச்சர்களும் கொள்கைகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்றார் அவர்.
அப்போதுதான் அவர்களால் தெளிவான வழிகாட்டுதலை வழங்க முடியும், சிறந்த அரசியல் முடிவுகளை எடுக்க முடியும், தவிர்க்க முடியாதவற்றை வழிநடத்த முடியும், கொள்கைகளை முன்வைக்கும்போது மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்றார் மூத்த அமைச்சர் லீ.
எதிர்காலச் சவால்களைச் சமாளிப்பதில் ஒன்றிணைந்து செயல்படுதல்
எதிர்வரும் ஆண்டுகளில் சிங்கப்பூர் வலிமையான உள்நாட்டு, வெளிப்புற சவால்களை எதிர்கொள்ளும் என்றும் எதிர்காலத்திற்குத் தயாராகும் பணி ஒருபோதும் முடிவடையாது என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்களின் எதிர்பார்ப்புகளும் விருப்பங்களும் அதிகரித்து வருகின்றன. அதேபோல், அரசாங்கம் மீதான அவர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கின்றன.
வளர்ச்சி கடினமாகும்போது, அரசியல் போட்டி கடுமையாகும்போது, சிங்கப்பூருக்கான சில முடிவுகள் தவறாகப் போகக்கூடும் என்று அவர் கூறினார்.
உலகம் மாறும்போது, தலைமுறைகள் மாறும்போது, அமைப்புமுறை தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவதை உறுதிசெய்ய அதை சிறந்த முறையில் புதுப்பிக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் கூறினார்.


