பொதுப் போக்குவரத்தில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டைகளைப் பயன்படுத்தலாம்

1 mins read
3f9dad1c-4008-403e-9176-376d2bdf563c
பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் பயன்படுத்தப்படும் வங்கிக் கடன் அட்டைகளின் பட்டியலில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டைகளும் இணைந்துள்ளன. - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் மே 15ஆம் தேதிமுதல் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டைகளைப் பயன்படுத்தலாம்.

இதன்மூலம் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் பயன்படுத்தப்படும் வங்கிக் கடன் அட்டைகளின் பட்டியலில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டைகளும் இணைந்துள்ளன.

கடன் அட்டைகள் தொடர்பில்லா அட்டைகளாக (contactless cards) இருக்க வேண்டும். அப்போதுதான் அவற்றை ரயில்களிலும் பேருந்துகளிலும் பயன்படுத்த முடியும்.

இதுதொடர்பான அறிக்கையை நிலப் போக்குவரத்து ஆணையமும் அமெரிக்கன் எக்ஸ்பிரசும் கூட்டாகச் செவ்வாய்க்கிழமை (மே 13) வெளியிட்டன.

இதுபோன்ற வசதிகளால் பொதுமக்கள் மற்றொரு பயண அட்டையைப் பயன்படுத்தத் தேவையில்லை அல்லது பயண அட்டையில் அவ்வப்போது பணத்தை நிரப்பத் தேவையில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பயணிகளுக்கு ஈஸி லிங்க் அட்டைகளில் என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அந்தக் கட்டணம் தான் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டை பயன்படுத்துபவர்களிடம் இருந்தும் வசூலிக்கப்படும். கூடுதல் கட்டணங்கள் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டது.

பயணிகள் தங்களது கடன் அட்டை அறிக்கையில் பயணத்திற்கான செலவுகளை எளிதாகப் பார்க்க முடியும்.

பயணிகள் தங்களது பயணத்தின்போது ஒரே அட்டையைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பேருந்தில் ஏறும்போது ஓர் அட்டையையும் இறங்கும்போது மற்றோர் அட்டையையும் பயன்படுத்தினால் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்