தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொதுப் போக்குவரத்தை கவனமாகத் திட்டமிட வேண்டும்: சீ ஹொங் டாட்

2 mins read
8d1fc790-d8c2-465e-aef3-754652e39350
ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலரை சந்தித்துப் பேசிய அமைச்சர் சீ ஹொங் டாட். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசாங்கம் அதிக பேருந்துகளை வாங்கவும் அதிக ஓட்டுநர்களை வேலையில் அமர்த்தவும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இருந்தாலும், பொதுமக்களுக்கான பொதுப் போக்குவரத்து அதிக வசதிகளோடு இருக்கவும் கட்டணம் கட்டுப்படியாகக் கூடியதாக இருக்கவும் கவனமாகத் திட்டமிட வேண்டியிருக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார்.

ஆர்ச்சர்ட் ஹோட்டலில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) நடைபெற்ற சிங்கப்பூர் பொருளியல் சமூகத்தின் வருடாந்தர விருந்து நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

சிங்கப்பூரின் எம்ஆர்டி ரயில் கட்டமைப்பு தொடர்ந்து விரிவுபடுத்தப்படுகிறது. இந்நிலையில் பேருந்துச் சேவைகளை ஏன் ஏற்புடைய வகையில் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து திரு சீ விளக்கினார்.

எம்ஆர்டி ரயில் சேவைகளோடு பேருந்துச் சேவைகளும் இருக்கின்றன. பயணிகள் எம்ஆர்டி சேவைக்கு மாறுவதால் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைகிறது.

“இத்தகைய சேவைகளை தொடர்ந்து வைத்திருந்தால் ஒட்டுமொத்த போக்குவரத்து கட்டமைப்புக்கான செலவுகள் கூடி பயணிகளுக்கான கட்டணமும் அதிகரிக்கும். இது, வரி செலுத்துவோருக்கும் சுமையாக இருக்கும்,” என்று நிதி இரண்டாம் அமைச்சருமான திரு சீ தெரிவித்தார்.

தற்போது மூலதனச் செலவுகள் மற்றும் இயக்கச் செலவுகள் முழுமையாக மீட்கப்படாத நிலையில் பயணிகள் ஒரு பயணத்திற்கு ஒரு வெள்ளிக்கும் அதிகமான மானியத்தை அனுபவிக்கின்றனர் என்றார்.

அரசாங்கம் அதிக அளவு முதலீடுகளையும் தொடர்ச்சியாக மானியங்களையும் வழங்காமல் இருந்தால், சிங்கப்பூரில் அதிக வளர்ச்சியடையாத போக்குவரத்துச் சேவையுடன், கட்டணம் அதிகமாக இருந்திருக்கும். தற்போது, அரசாங்க ​​அதிகாரிகள் ஆண்டுதோறும் $2 பில்லியனுக்கும் அதிகமான பொதுப் போக்குவரத்து மானியங்களை வழங்குகின்றனர்.

அரசாங்கம், மத்திய நிர்வாகியாக பொதுப் போக்குவரத்து தேவையை விரைவாக பூர்த்தி செய்து வருகிறது.

கடந்த ஜூலையில் தொடங்கப்பட்ட பேருந்து இணைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை அவர் உதாரணமாக சுட்டிக்காட்டினார்.

இது, குறைவான போக்குவரத்து வசதியுள்ள குடியிருப்புப் பகுதிகளின் தொடர்புகளை மேம்படுத்தும். ஏற்கெனவே உள்ள போக்குவரத்து முனையங்களுடன் இணைக்கவும் இது உதவும்.

இத்திட்டத்தின்கீழ், பேருந்துக் கட்டமைப்பை மேம்படுத்தவும் தீவு முழுவதும் உருவாகும் புதிய குடியிருப்பு வட்டாரங்களை இணைக்கவும் அடுத்த எட்டு ஆண்டுகளில் 900 மில்லியன் வெள்ளி செலவிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

பொருளியல் கண்ணோட்டத்துடன் பார்த்தால் சிங்கப்பூர் எம்ஆர்டி தடங்களுக்கு ஈடாக உள்ள குறைவான பயணிகளைக் கொண்ட பேருந்துச் சேவைகளை புதிய குடியிருப்புப் பேட்டைகளுக்குப் பயன்படுத்துவது சரியான கொள்கையாக இருக்கும் என்றார்.

ஆனால், புதிய எம்ஆர்டி தடங்களையும் ஏற்கெனவே உள்ள பேருந்துச் சேவைகளை விரும்பும் குடியிருப்பாளர்களின் எதிர்ப்பையும் அரசாங்கம் கையாள வேண்டும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதனால்தான் சிறந்த பொருளியலுக்கு விரும்பியவற்றை அடைய நல்ல அரசியல் தேவை என்று தான் நம்புவதாக அமைச்சர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்