தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டு; தகுதிபெறும் குறைந்த வருமானக் குடும்பங்கள் ஜனவரி 14 முதல் விண்ணப்பிக்கலாம்

2 mins read
df0f5f87-0454-4042-a3d6-93fddb18e613
பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் கட்டண அட்டைகளை நிரப்புவதற்கோ மாதாந்தர அட்டைகளை வாங்குவதற்கோ பயன்படுத்தப்படலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சென்ற ஆண்டு பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளைப் பெறாத, $1,800க்கும் குறைவான தனிநபர் மாதாந்தர வருமானத்தைக் கொண்ட குடும்பங்கள் ஜனவரி 14 முதல் அக்டோபர் 31 வரை பற்றுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அந்த $60 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகளுக்கு இணையத்தில் அல்லது உள்ளூர் சமூக மன்றங்களில் விண்ணப்பிக்கலாம். பொதுப் போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பைச் சமாளிக்க அவை உதவும்.

இந்தக் காலகட்டத்தின்போது, குடும்ப வருமானத் தகுதிநிலையின் அடிப்படையில் தகுதிபெறாதவர்கள் உட்பட, அதிக உதவி தேவைப்படும் குடும்பங்கள் இணையத்தில் அல்லது உள்ளூர் சமூக மன்றங்களில் மேல்முறையீடு செய்யலாம் என்று போக்குவரத்து அமைச்சும் மக்கள் கழகமும் திங்கட்கிழமை (ஜனவரி 13) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறின.

பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் தொடர்பான கடிதத்தைப் பெற்ற குடும்பங்கள், கடிதத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, ‘சிம்ப்ளிகோ’ செயலி, ‘சிம்ப்ளிகோ’ சாவடி, பணம் நிரப்பும் சாவடி, ‘சிம்ளிகோ’ நுழைவுச்சீட்டு அலுவலகம், ‘சிம்ப்ளிகோ’ நுழைவுச்சீட்டு சேவை நிலையம் ஆகியவற்றில் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

கேள்விகள் இருந்தால், குடியிருப்பாளர்கள் தங்கள் உள்ளூர் சமூக மன்றத்தையும் நாடலாம்.

ஒவ்வொரு தகுதிபெறும் குடும்பமும் ஒரு பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டைப் பெறும். அந்தப் பற்றுச்சீட்டு, கட்டண அட்டைகளை நிரப்புவதற்கோ மாதாந்தர அட்டைகளை வாங்குவதற்கோ பயன்படுத்தப்படலாம். பற்றுச்சீட்டுகள் 2026ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை செல்லுபடியாகும்.

சென்ற ஆண்டு டிசம்பரில் நிறைவுபெற்ற பற்றுச்சீட்டுத் திட்டத்தின் முதற்கட்டத்தைத் தொடர்ந்து, இப்போது அடுத்தக் கட்ட பற்றுச்சீட்டுத் திட்டம் நடைபெறுகிறது. 2023ஆம் ஆண்டின் பற்றுச்சீட்டுத் திட்டத்தின்போது தொடர்ந்து தகுதிநிலையைப் பூர்த்தி செய்த கிட்டத்தட்ட 270,000 குடும்பங்கள் கடிதங்களைப் பெற்றன.

ஆக அண்மைய திட்டத்தின் ஒரு பகுதியாகக் கொடுக்கப்பட்ட பற்றுச்சீட்டுகளின் மதிப்பு $60. 2023ஆம் ஆண்டுத் திட்டத்தில் வழங்கப்பட்ட $50 பற்றுச்சீட்டுகளின் மதிப்பைவிட அது அதிகம். மேலும், 60,000 குடும்பங்கள் இதன் மூலம் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்