பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் காத்திருப்பு நேரத்தை சீர்படுத்தலாம்: ‘பிடிசி’

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் காத்திருப்பு நேரத்தை சீர்படுத்தலாம்: ‘பிடிசி’

2 mins read
fb6f341e-63ae-4591-afa7-32c937b96e22
பொதுப் போக்குவரத்து மன்றம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் மேம்படுத்தப்படக்கூடிய மூன்று அம்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மூன்று அம்சங்கள்

பேருந்து, ரயில்களில் சேரும் கூட்டம், பேருந்துகளுக்கான காத்திருப்பு நேரம் சீராக இல்லாதது, ரயில்களில் குளிரூட்டும் வசதி சீராக இல்லாதது ஆகியவை அந்த மூன்று அம்சங்களாகும்.

மேலும், ஆய்வுக் குழுக்கள் தெரிவித்த கருத்துகள், பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துவோரிடம் இருக்கக்கூடிய திருப்தியைக் கணிக்கும் கருத்தாய்வு ஆகியவற்றின் மூலம் பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணிகளிடையே காணப்படும் பணிவன்பு, பிறர்மீதான அக்கறை ஆகியவையும் கவலை தரும் அம்சங்களாக உள்ளது தெரியவந்துள்ளதெனப் பொதுப் போக்குவரத்து மன்றம் (பிடிசி) திங்கட்கிழமை (ஜூலை 20) அறிக்கையில் தெரிவித்தது.

பேருந்துகளுக்கான காத்திருப்பு நேரம் சீராக இல்லாதது, கூட்டமாக இருக்கும் பேருந்துகளிலும் ரயில்களிலும் ஏறுவதில் இருக்கும் சிரமம் ஆகியவை பயணிகளுக்கு அதிக கவலை தரும் அம்சங்களாக இருக்கின்றன. தங்கள் பயணங்களை நன்கு திட்டமிட பேருந்துகளும் ரயில்களும் எந்த நேரத்தில் வந்தடையும் என்ற விவரம் மேலும் துல்லியமாகத் தெரிவிக்கப்படவேண்டும் என்பது பயணிகளின் விருப்பமாகும்.

கூட்டம் அதிகம் இல்லாத போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துவது, பேருந்து மற்றும் ரயிலுக்கான காத்திருப்பு நேரம் குறைவாக இருப்பது போன்றவற்றை பயணிகள் விரும்புவதாக பிடிசி குறிப்பிட்டது.

கூட்டம், காத்திருப்பு நேரம்

பேருந்துக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (Bus Connectivity Enhancement Programme) பேருந்துச் சேவைகளுக்கு நடுவிலான நேர இடைவெளி போன்ற அம்சங்கள் சீராக்கப்பட்டுள்ளன. அதோடு, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை மூலம் ரயில்களின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் கூட்டம், காத்திருப்பு நேரம் ஆகியவை பயணிகளுக்குத் தொடர்ந்து பிரச்சினைகளாக இருந்துவருவதாக பிடிசி குறிப்பிட்டது.

அதோடு பேருந்து, ரயில்களில் இடம் இருக்கும்போது பிறர் நகர்ந்து இடம் அளிப்பதில்லை என்றும் பயணிகள், கருத்து தெரிவிப்பதற்கான தளங்களின்வழி தெரியப்படுத்தியிருக்கின்றனர். அதன் காரணமாகப் பயணிகள் சிலரால் முதலில் வரும் பேருந்திலோ ரயிலிலோ ஏற முடியாமல் போவது தெரியவந்துள்ளது.

பொதுப் போக்குவரத்துச் சேவைப் பயன்பாட்டை மேலும் சீராக்க நிலப் போக்குவரத்து ஆணையம், பயணிகள், பொதுப் போக்குவரத்துச் சேவைகளை நடத்தும் அமைப்புகள் ஆகிய தரப்புகளைத் தொடர்புகொள்ளப்போவதாக பிடிசி கூறியது. பின் கதவு வழியாகப் பேருந்தில் ஏற அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகளின்வழி நிலைமையை மேம்படுத்துவது போன்றவை ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பேருந்துரயில்பயணிகள்