சிங்கப்பூரில் வரி தொடர்பான மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறையும் இணையப் பாதுகாப்பு அமைப்பும் கேட்டுக்கொண்டு உள்ளன.
அண்மையில் பிரபலமடைந்த இறக்குமதி வரி தொடர்பான விவகாரம், சிங்கப்பூரில் தனிப்பட்டோரையும் அமைப்புகளையும் குறி வைக்கும் மோசடிகளை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அவை கூட்டறிக்கையில் தெரிவித்து உள்ளன.
வரிகள் தொடர்பான மாற்றங்களின் நிச்சயமற்ற நிலையைப் பயன்படுத்தி இணையக் குற்றவாளிகள் மோசடிகளில் ஈடுபடுவதாக பிற நாடுகளில் தெரிவிக்கப்பட்ட புகார்களை அவை மேற்கோள் காட்டி உள்ளன.
எனவே, அதுபோன்ற மோசடிகளில் சிக்காத வகையில் இணையத் தற்காப்பைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்களையும் அமைப்புகளையும் காவல்துறையும் இணையப் பாதுகாப்பு அமைப்பும் வலியுறுத்தி உள்ளன.
அமெரிக்காவில் இறக்குமதியாகும் பெரும்பாலான பொருள்களுக்கு 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று ஏப்ரல் 2ஆம் தேதி அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்தார். சில நாடுகளுக்கு அதைவிடக் கூடுதல் வரி விதிக்கப்பட்டது.
வரியை மையப்படுத்தி நான்கு விதமான மோசடிகள் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக சிங்கப்பூரில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
போலி முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தகம் தொடர்பான மோசடிகள், இணைய வர்த்தக மோசடிகள், அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்ட மோசடிகள் ஆகியன அவை.

