சமூகம் ஒன்றுபடவும் சவால்களை எதிர்கொள்ளவும் உதவி தேவை: மக்கள் எதிர்பார்ப்பு

3 mins read
474b8a09-6318-4441-86a2-f7cbd7708477
உயர்ந்துவரும் உணவுச் செலவால் அரசாங்கம் கூடுதலான சிடிசி பற்றுச்சீட்டுகளை வழங்கும்படி பாதுகாவல் நிறுவன உரிமையாளர் கெளரி சுப்பிரமணியம், 42, தெரிவித்திருக்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிச்சியமின்மையும் கொந்தளிப்பும் மிக்க புதிய உலகச் சூழலில் சிங்கப்பூரை வழிகாட்ட சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங் உறுதி அளித்திருக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவன்று அவரது புதிய அமைச்சரவையை அமைத்தபோது திரு வோங் அவ்வாறு கூறினார்.

ஆலோசனைகளுக்குச் செவிசாய்க்கும் அரசு முறையையும் பிரதமர் வோங் உறுதி செய்திருக்கிறார். அவர் தலைமையில் இரண்டாவது அரசாங்கத்திற்கான எதிர்பார்ப்புகளைப் பொதுமக்களில் சிலர் தமிழ் முரசிடம் முன்வைத்துள்ளனர்.

விலைவாசி குறித்து கவலை

உயர்ந்துவரும் உணவு செலவால் அரசாங்கம் கூடுதலான சிடிசி பற்றுச்சீட்டுகளை வழங்கும்படி பாதுகாவல் நிறுவன உரிமையாளர் கெளரி சுப்பிரமணியம், 42, தெரிவித்திருக்கிறார்.

“எனது குடும்பத்தில் ஏழு பேர் உள்ளனர். தற்போது நிலவும் பணவீக்கத்தால் 300 வெள்ளிப் பற்றுச்சீட்டும் போதாது. நிலைமையைச் சமாளிக்கத் தத்தளிக்கும் என்னைப் போன்றவர்களுக்குக் கூடுதல் உதவிகளை எதிர்பார்க்கிறேன்,” என்று அடித்தளத் தலைவராகவும் உள்ள அவர் கூறினார்.

தைப்பூசத்தைப் பொது விடுமுறையாக்க பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த பெரிஸ் வி. பரமேஸ்வரி குரல்கொடுக்கும் முயற்சியையும் தாம் வரவேற்றதாகத் திருவாட்டி கெளரி கூறினார்.

வாகன உரிமை, வீட்டுரிமை கொள்கைகளின் அரசாங்கம் தனது கெடுபிடி போக்கைத் தளர்த்துவது காலத்து ஏற்ற நல்ல செயலாகும் என்று தணிக்கையாளர் செந்தில் குமரன், 36, தெரிவித்தார்.

“என் தலைமுறையினரில் பலருக்குப் பிள்ளைகளையும் வயதான பெற்றோரையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்புகள் உள்ளன. எங்களுக்கு வாகனங்கள் சொகுசுப் பொருள்கள் அல்ல. அவசிய பொருளாக நான் அதனைக் கருதுவேன். பெரிய குடும்பங்களுக்குக் கார் வாங்குவதற்கான தள்ளுபடிகளை வழங்குவது நல்லதாகும்,” என்று இரண்டு இளம் பிள்ளைகளுக்குத் தந்தையாக உள்ள திரு குமரன் கூறினார்.

இந்தியச் சமுகம் ஒற்றுமையுடன் மேம்படவேண்டும்

சிங்கப்பூரர்களாகப் பிறந்தவர்களுக்கும் புதிய குடிமக்களுக்கும் இடையேயான ஒற்றுமையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை வரும் அரசாங்கம் அதிகரிக்கலாம் என்று ஜெயந்தி பழனிசாமி, 44, கூறுகிறார்.

“மக்கள் ஒருவரோடு ஒருவர் பழகி மனம்விட்டுப் பேசுவதற்கான கூடுதல் தளங்கள் அமைக்கப்படவேண்டும். அல்லது, தற்போதையை தளங்களுக்கு இன்னும் வளமூட்டி மக்களை மேலும் இணைக்கவேண்டும். சிங்கப்பூர் இந்தியர்களுக்குறித்த அடையாளத்தைக் கட்டிக்காக்கும் முயற்சிகளும் தேவை,” என்று அவர் கூறினார்.

வீடமைப்புக் கொள்கைகள் சிறுபான்மையினரைப் பாதிப்பதாகச் சுய தொழில் செய்யும் டி. தியாகராஜன், 53, தெரிவித்தார்.

“சிங்கப்பூரில் இந்தியர்களின் மிகச் சிறுபான்மையர். கல்வி, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் நம்மை ஒட்டுமொத்தச் சமூகத்தினருடன் ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரவேண்டும்,” என்று திரு தியாகராஜன் கூறினார்.

இதையும் தாம் வலுவாக உணர்வதாகக் கூறும் கணக்காய்வாளர் பிரேமலா ஜி., 60, வேலைக்கான் தேடல், பதவி உயர்வு ஆகியவற்றுக்கு இந்தியர்கள் கூடுதலாகக் கருதப்படவேண்டும் என விரும்புவதாகக் கூறினார்.

நாளைய ஊழியரணியில் சேரவுள்ள இளையர்கள்

தேசிய பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவராக உள்ள பிரணவன் சிவலிங்கம், 23, பொதுத்தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கவுள்ளார்.

உலக அரசியல் நிச்சயமின்மையாலும் பொருளியல் உருமாற்றத்தாலும் வேலை குறித்து கவலைப்படுவதாகக் கூறுகிறார். இந்தக் கவலையைப் போக்கும் வகையில் அரசாங்கம் திட்டங்களை அறிவிக்கலாம், என்று அவர் கூறினார்.

பல்கலைக்கழகம் செல்லக் காத்திருக்கும் அர்ஜிதா பாலாஜி, 18, மாணவர் மனநலத்திற்காகவும் அரசாங்ம் கூடுதலாகச் செய்யலாமென விரும்புகிறார். புதிய தொழில்களை உருவாக்குவதற்கான இளையர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசாங்கம் விரிவுபடுத்தலாம் என்றும் அவர் கூறுகிறார்.

குறிப்புச் சொற்கள்