புலாவ் புக்கோம் ஷெல் எரிபொருள் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து எரிபொருள் திருடப்பட்டது தொடர்பான விசாரணைக்கு இடையூறு விளைவித்த குற்றத்துக்காக ஆடவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
53 வயது வோங் வாய் செங்கிற்கு வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 31) இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
$128 மில்லியன் பெறுமானமுள்ள எரிபொருள் திருட்டுடன் தொடர்புடைய அலுவலரின் இருப்பிடம் தொடர்பாகக் காவல்துறையினரிடம் வோங் பொய் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகத் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வோங் ஒப்புக்கொண்டார்.
2007ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் புலாவ் புக்கோம் எரிபொருள் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து ஷெல் ஊழியர்கள் சிலர் எரிபொருளைத் திருடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆலையிலிருந்து திருடப்பட்ட எரிபொருளை அந்தக் கும்பல், குறைந்த விலைக்குக் கப்பல்களுக்கு விற்றது.
அதன்மூலம் கிடைத்த பணத்தை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
இத்திருட்டின் மூளையாகச் செயல்பட்டவர்களில் ஒருவரான ஜுவான்டி புங்கோட்டுக்குக் குறைந்தது் $5.6 மில்லியன் கிடைத்தது.
தொடர்புடைய செய்திகள்
அவருக்கு 29 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சென்டெக் 22, சென்டெக் 26 ஆகிய கப்பல்கள் திருடப்பட்ட எரிபொருளைப் பெற்றுக்கொண்டன.
அவை இரண்டும் சென்டெக் மரின் அண்ட் டிரேடிங் நிறுவனத்துக்குச் சொந்தமானவை.
அந்தக் கப்பல்களில் இருந்த அலுவலர்களான பூ பு வென், வோங் குயின் வா, வோக் வாய் மெங் ஆகியோர் எரிபொருள் திருட்டுடன் தொடர்புடையவர்கள்.
எரிபொருள் திருட்டு குறித்து 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவல்துறையிடம் ஷெல் நிறுவனம் புகார் அளித்தது.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்டெக் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

